blank'/> muhilneel: விருது

Thursday, July 3, 2014

விருது

நேரம் ஆக ஆக கண்மணிக்கு மனதுள் சற்று கலக்கம் ஏற்பட்டது. துணைக்கு வந்திருந்த தோழி  தங்கமீனாவோ, நிலைகொள்ளாது தவித்துக் கொண்டிருந்தாள். இருவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை.

" இவ்வளவு நேரம் ஆகும்னு தெரிஞ்சிருந்தா, நான் வந்திருக்கவே மாட்டேன் "  என்று  பதைபதைப்புடன் சற்று காட்டமாகவே பொரிந்தாள் தங்கமீனா.

" நானும் இதை எதிர்பார்க்கலையே. இப்போ என்ன பண்றதுனே  புரியலையே " என்றாள் கண்மணி, தங்கமீனாவின் பதட்டம் தன்னுள்ளும் பற்றிக் கொண்டவளாக.

" நான் எட்டு மணிக்குள்ள ஹாஸ்டலுக்குப் போகலைன்னா, லேட்டா வந்ததுக்காக  ஃபைன் போட்டுடுவாங்க. நான் உடனே ஹாஸ்டலுக்குப் போயாகனும். எனக்கு இந்த ஊர் வேற புதுசு. என்ன பண்றதுன்னே புரியல. ரொம்ப பயமா இருக்கு. நான் உடனே கிளம்பறேன்." என்று முகத்தில் கலவரம் சூழ்ந்தவளாய் சொன்னாள் தங்கமீனா.


அந்த இக்கட்டான சூழ்நிலையில் என்ன செய்வதென்று புரியாமல், " சரி மீனா, நீ வேணுமானால் கிளம்பிப் போ. நான் இருந்து விழா முடிஞ்சதும் வரேன் " என்றாள் கண்மணி.


கண்மணிக்கு விவேகானந்தர் அறக்கட்டளையின் சார்பில் "இளம் கவி" விருது வழங்கப்படுவதாய் இருந்தது.கவிஞருக்கான விருதினை பெறுகிறாள் என்று, கண்மணியை ஏதோ பெரிய கவிஞர் என்று எண்ணி விட வேண்டாம். மனதில் பிரவாகமெடுத்து ஓடும் அரூபமான எண்ண அலைகட்கு தனக்குத் தெரிந்த வார்த்தைகளினால் ரூபம் கொடுக்கிறாள். அவ்வளவே ! கலந்து கொள்ளும் அனைத்து கவிதைப் போட்டிகளிலும் வெற்றி வாகை சூடினவளில்லை.ஆனாலும், எழுதுவதை அவள் கைவிடவில்லை.


ஒருமுறை நாளிதழில், இளம் படைப்பாளர்கள், அவர்கள் கல்வி, இசை, ஓவியம், நடனம் என்று  எத்துறையில் சிறந்து விளங்கினாலும்,அதற்குத் தக்க சான்றுகள்   அளித்தால், பரிசீலனைக்குப் பின் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.  அப்படித் தான், கண்மணிக்கும் அவ்விருது கிடைத்தது.


அந்த விருதினை வாங்கத் தான், கண்மணி தன் தோழி தங்கமீனாவுடன் வந்திருந்தாள். கண்மணிக்கு அவ்விருதை தனது பெற்றோருடன் வந்து வாங்க வேண்டுமென்று பேராவல். ஆனால், ஆசிரியை ஆக பணிபுரியும் கண்மணியின் தாயாருக்கோ, அன்று முக்கியமான  கூட்டம். அவளது தந்தையோ, அவரது வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்தார். தனியாக விழாவிற்கு வந்து செல்வதற்கு தயங்கிய கண்மணியுடன், தங்கமீனா உடன் வருவதாகக் கூற, தைரியமாகப் புறப்பட்டு வந்து விட்டாள் கண்மணி.


ஆறு மணிக்கு விழா ஆரம்பித்தது. விழாவின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் உரையாற்றி முடித்து, விருதுகள்  ஆரம்பிக்கவே மணி  ஏழரை ஆகிவிடும் போல் தோன்றியதால், அதற்கு மேல் அதிக நேரம் அங்கிருந்தால், தங்கமீனா விடுதிக்கு செல்ல மிகவும் தாமதமாகி விடும். ஆதலால், அவளை விடுதிக்கு அனுப்பிவிட்டு, தன்  தாயை வீட்டிலிருந்து கிளம்பி வரச் சொல்ல எண்ணி, வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து, தன் தாயிடம் விஷயத்தை கூறினாள் கண்மணி. அவரோ,உடனே கிளம்ப முடியாது என்றும், சற்று நேரத்தில் உடன் படிக்கும் நண்பனது வீட்டிற்கு சென்ற கண்மணியின் தம்பி வந்ததும் கிளம்பி வருவதாக சொன்னார்.


" தங்கமீனா, எங்க அம்மா  கிளம்பி வரேன்னு சொல்லியிருக்காங்க. நான் உன்னை நகரப் பேருந்தில் (டவுன் பஸ்) ஏற்றி விடுகிறேன் , பேருந்து காலேஜ்  அருகில் உள்ள நிறுத்தத்திற்கே செல்லும் , நீ  ஹாஸ்டலுக்கு  குறித்த நேரத்திற்கு சென்று விடலாம் " என்று சொன்னாள்  கண்மணி.


தங்கமீனாவோ, " எனக்கு இந்த ஊர் புதிது. இந்த இடமும் புதிது. எனக்கு நம்ம காலேஜும் , பக்கத்தில் இருக்கும் சில இடங்களுக்கு செல்லவும் மட்டுமே தெரியும். வேறு எதுவுமே இந்த ஊரில் தெரியாது. நான் உடனடியா போய்  ஆகணும். இல்லைன்னா,  என்னைய ஹாஸ்டல்ல இருந்து வெளிய அனுப்பிருவாங்க." என்று அழ ஆரம்பித்து விட்டாள்.


என்ன செய்வதென்று புரியாமல், தவித்த கண்மணி, விழாக் கமிட்டியினரிடம் சென்று, நிலைமையை எடுத்துரைத்தாள். உடனடியாக விருதினை வழங்க ஏதேனும் வழி உள்ளதா, அல்லது அஞ்சலில் பெற்றுக் கொள்ள முடியுமா என்று கேட்க, அவர்கள் உடனடியாக வழங்க வழிவகை செய்வதாக சொல்லிச் சென்ற சில நிமிடங்களிலேயே, சிறப்பு விருந்தினர்களின் உரை அனைத்தும் முடிந்தது. விருது வழங்க ஆரம்பித்ததும், முதலாவதாக கண்மணியை அழைத்து விருதினை வழங்கினர்.


விருதினை பெற்றுக் கொண்டதும், அங்கிருந்து சிட்டெனக் கிளம்பி விட்டனர் தங்கமீனாவும் கண்மணியும். ஓர் ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு கிளம்பினார்கள் இருவரும். தங்கமீனாவை கல்லூரி விடுதியில் விட்டுவிட்டு, வீட்டிற்கு செல்ல எண்ணினாள் கண்மணி. பொதுவாக நண்பர்களது வீட்டிற்கு சென்றால், மிகவும் தாமதமாகவே வருவான் கண்மணியின் சகோதரன். அதை மனதில் எண்ணிப் பார்த்தவள், தனது தாய் எப்படியும் கிளம்ப தாமதம் ஆகும். ஆட்டோவில் செல்வதால் விரைவாக  சென்று விடலாம். எப்படியும் வழியிலேயே தனது தாயைக் கண்டு, அவரை நிறுத்தி அவருடனேயே வீட்டிற்கு சென்று விடலாம் என்றெண்ணிய கண்மணிக்கு மிகப் பெரிய ஏமாற்றம்.


கல்லூரியில் மாணவர்கள் கைபேசி பயன்படுத்தக் கூடாது என்று மிகக் கடுமையான சட்டம் இருந்ததால், கண்மணியிடம் கைபேசியும் இல்லை. அதனால், அவளால் தனது தாயை தொடர்பு கொள்ளவும் இயலவில்லை. கண்மணி வீட்டிற்கு செல்லும் முன்னமே, அவளது தாயார் விழா நடக்கும் இடத்திற்கு சென்று விட்டிருந்தார். அங்கு சென்று கண்மணியைப் பற்றி விசாரிக்க, அவர்களோ, கண்மணி விருதினை அவசர அவசரமாகப் கேட்டுப் பெற்றுக் கொண்டு சென்று விட்டதாய்ச் சொல்ல, அந்தத் தாயின் மனம் பயத்தில் மிகவும் பதைபதைத்தது. மகளுக்கு என்னாயிற்றோ, எங்கு சென்றாளோ, அவசரமாகப் புறப்பட்டு வரச் சொன்னாளே, இங்கு காணவில்லையே, எங்கு சென்றாளோ, என்ன செய்வது என்று மனம் நடுங்கியது.


அருகிலிருக்கும் பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோ நிற்கும் இடங்களில் தன் மகள் இருக்கிறாளா என்று பார்த்தபடியே வந்தார். ஆனால், அங்கு எங்கும் கண்மணி இல்லாதது, அந்தத் தாய்க்கு கலக்கத்தையே ஏற்படுத்தியது. மனதில் குழப்பமும், கவலையும் ஒருசேர, என்ன செய்வதென்று புரியவில்லை. எனவே பயத்துடனும் படபடப்புடனும், மீண்டும் பேருந்திலேறி வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தார்.


வீட்டிற்கு முன்னமே வந்து சேர்ந்துவிட்ட கண்மணிக்கோ, வீட்டில் இருப்பு கொள்ளவில்லை. அவளிடம் வீட்டுச் சாவியும் இல்லை. வாசலில் அமர்ந்து கொண்டாள். பூட்டியிருந்த வீட்டினுள் தொலைபேசி பத்து நிமிட இடைவெளியில் அடித்து அடித்து ஓய்ந்தது. தனது தந்தை தான் தொலைபேசியில் அழைக்கிறார் என்பது கண்மணிக்கு தெரியும். தந்தையிடம் நன்றாக திட்டு வாங்கப் போகிறாள் என்பது நன்றாகவே தெரிந்தது. மனம் எங்கும் பயம் பேயென  அப்பிக் கொண்டது. வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கும், பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டிற்கும் என நிலை கொள்ளது தவிப்புடன் ஓடிக் கொண்டிருந்தாள் கண்மணி.



வீட்டைத்  தாண்டி வாகன நெரிசல் மிகுந்த சாலையில் வருவதும் போவதுமாய் இருக்க, கண்மணிக்கு என்னவோ போலிருந்தது. ஒன்பது மணியை வேறு நெருங்கி விட்டதால், சாலையில் தனியாக சென்று வந்து கொண்டிருந்தவளுக்கு பயம் வேறு விடாப்பிடியாய் துணையாகிப் போனது. தூரத்தில், தன் தாய் வருவதைக் கண்டதும், ஏனோ கண்மணிக்கு மகிழ்ச்சிக்கு பதிலாய், அடிவயிற்றிலிருந்து விம்மலாய் அழுகை பீறிட்டுக் கிளம்பியது. வேகமாக ஓடி  வந்து, தன் தாயின் கரங்களைப் பற்றிக் கொண்டவள், ஓவென அழுது தீர்த்தாள்.



மிகுந்த அலைச்சலும், மகளைக் காணவில்லையே என்ற பரிதவிப்பினால் உண்டான  மன உளைச்சலும் அந்தத் தாய்க்கு ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருந்தன. வீட்டிற்கு வந்து சேர்ந்த  சில மணி நேரங்கள், அந்த இல்லத்தில் மயான அமைதியிலேயே கடந்தன. சிறிது நேரத்திற்குப் பின், தாயே அமைதியைக் கலைத்தார். மகளை உணவருந்த அழைத்து, தாயும் பிள்ளைகளும் ஒன்றாக இரவு உணவருந்தினர்.



கண்மணி  தனக்கு நேர்ந்த இக்கட்டான சூழலை தாயிடம் விளக்கிக் கூறினாள். பேசப் பேச, வார்த்தைகள் எல்லாம் தொண்டைக் குழியின் அடியாழத்திலேயே சிக்கிக் கொண்டு விட, அவளுக்கு கண்ணீரே வார்த்தைகளானது. தன் மகளின் கண்ணீரைக் காணப் பொறுக்காத தாய், கண்மணியை ஆரத் தழுவிக் கொண்டார். அந்தத்  தழுவலே கண்மணிக்கு ஆயிரமாயிரம் விருதுகளைப் பெற்ற மனமகிழ்வையும் பேரானந்தத்தையும் ஏற்படுத்தியது.


8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதையை அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

//தன் மகளின் கண்ணீரைக் காணப் பொறுக்காத தாய், கண்மணியை ஆரத் தழுவிக் கொண்டார். அந்தத் தழுவலே கண்மணிக்கு ஆயிரமாயிரம் விருதுகளைப் பெற்ற மனமகிழ்வையும் பேரானந்தத்தையும் ஏற்படுத்தியது.//

முடிவு வரிகள் நிறைவாக உள்ளன.

வெளியே சென்றுவரும் பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை சோதனைகள், பயங்கள், கவலைகள். ஒவ்வொரு வரியைப்படிக்கும் போது மனதுக்கு மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது. ஏதோ நல்லபடியாக கதை முடிந்ததில் / முடித்ததில் மகிழ்ச்சியே. - VGK

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் அருமை... வாழ்த்துக்கள்...

Tamizhmuhil Prakasam said...

@ வை.கோபாலகிருஷ்ணன்

தங்களது அன்பான பாராட்டுதல்கட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

தங்களது கருத்துரை ஊக்கமும் உற்சாகமும் ஊட்டுகின்றன. நன்றிகள் பல ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

G.M Balasubramaniam said...

ஒரு நிகழ்ச்சியின் தாக்கங்களை எடுத்துச்சொன்ன விதம் அருமை

Tamizhmuhil Prakasam said...

@ G.M Balasubramaniam

தங்களது அன்பான கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார்.வாழ்த்துக்கள்.
www.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in

Tamizhmuhil Prakasam said...

அறியத் தந்தமைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

Post a Comment