blank'/> muhilneel: நாவினால் சுட்ட வடு - சிறுகதை விமர்சனம்

Sunday, April 13, 2014

நாவினால் சுட்ட வடு - சிறுகதை விமர்சனம்

  VGK 11 - நாவினால் சுட்ட வடு ’ 
சிறுகதை 

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


ரேவதி என் வீட்டுக்கு வந்தால் முன்பெல்லாம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். கலகலப்பாக மனம் விட்டு மணிக்கணக்காக பேசிக்கொண்டே இருப்போம்.

இப்போதெல்லாம் அவள் வருகிறாள் என்றாலே என் அடி வயிற்றைக் கலக்குகிறது. அவள் மட்டும் தனியாக வந்தால் பரவாயில்லை. இலவச இணைப்பு போல நண்டு சிண்டுகளாக அவளுடைய நாத்தனார் குழந்தைகளைக் கூட்டி வந்து விடுகிறாள்.






அந்த இரண்டும் ரெண்டுங்கெட்டான்கள். இரண்டு வயது கூட ஆகாத இரட்டைக் குழந்தைகள். வீட்டில் நுழைந்தவுடன் ஒரு இடத்தில் உட்காராதுகள். வெள்ளையான டைல்ஸ் தரையில் இங்கும் அங்கும் ஓடும். ஆங்காங்கே தரையை ஈரமாக்கிவிடும். பிறகு அதிலேயே வழுக்கி விழுந்து விடும். கைக்கு எட்டும் எல்லா சாமான்களையும் எடுத்து வாரி இறைக்கும். ராக்கில் உள்ள எல்லாப் பொருட்களையும் ஒவ்வொன்றாக விட்டெறிந்து கொண்டே இருக்கும். பேப்பர், புத்தகம் என்று எது கிடைத்தாலும் அதை கசக்கி கிழித்துப் போட்டு விடும்.

போன வாரம் வந்த போது, பெரிய சைஸ் இருமல் ஸிரப் பாட்டில் ஒன்றை கீழே போட்டு உடைத்து விட்டது, அந்தக்குழந்தைகள். ஸிரப் வீணாகிப் போனதோடு மட்டுமல்லாமல், உடைந்த பாட்டில் சிதறல்கள், கை கால்களில் பட்டு காயம் படாமல், திரட்டி எடுத்து சுத்தம் செய்வதற்குள், போதும் போதும் என்று ஆகி விட்டது, எனக்கு.

அந்தக்குழந்தைகள் அழுதால் கொடுக்க ஏதாவது பிஸ்கட், சாக்லேட்ஸ், பால், இட்லி, நெய்யுடன் பருப்பு அல்லது தெளிவான காரமில்லாத ரஸம் சாதம் என ஆகாரம் ஏதாவது நான் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

அவள் வரும்போதெல்லாம், என் வீட்டில் இப்படி பலவிதமான அலங்கோலங்கள் இந்தக் குழந்தைகளால் நடந்து வருவதால், எனக்கே தர்ம சங்கடமாக இருந்து வருகிறது. 


என்ன செய்வது, வரவேண்டாம் என்றோ, அவ்வாறு வந்தால் இதுகளைக் கூட்டி வரவேண்டாம் என்றோ, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தர்ம சங்கடமாக இருந்து வந்தேன்.

என் வீட்டுக்கு இன்று வரப்போவதாக போன் செய்து விட்டாள்., ரேவதி. “டி.வி.யில் அத்திப்பூக்கள் முடிந்த பிறகு வாடி” என்று கண்டிப்புடன் சொல்லி விட்டேன். நாளுக்கு நாள், விறுவிறுப்பாகப் போகும் ”அத்திப்பூக்கள்” இல் அவ்வளவு ஒரு ஈடுபாடு எனக்கு.



[அத்திப்பூத்தது போல, ஜனவரி 2011 இல் எழுதி, 
என் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட கதை இது]

அவள் வீடும் என் அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து ஒரு பத்து கட்டிடங்கள் மட்டும் தள்ளியிருப்பதால், சரியாக இரண்டரை மணி எப்போது ஆகும் என்று காத்திருந்து 2.35 க்கு ஆஜர் ஆகிவிடுவாள். இன்று எனக்கு மத்தியானத் தூக்கம் கிடையாது என்பது புரிந்துவிட்டது.

வாசலில் காலிங் பெல் அடித்தது. திறந்தேன். வாயெல்லாம் பல்லாக ரேவதி வந்து விட்டாள். நல்ல வேளையாக இலவச இணைப்பு இன்று, ஒன்று மட்டுமே அவளுடன் வந்திருக்கிறது. பாவம் அந்த மற்றொன்று வீட்டிலேயே தூங்கி விட்டதாக துக்கத்துடன் கூறிக் கொண்டாள். இன்று ஒற்றைத் தலைவலி மட்டும் தான் என்று நினைத்துக்கொண்டு, அவளை வரவேற்றேன்.


வீட்டிற்குள் நுழைந்த அந்தப்பொடியன் மிகவும் சாதுவாக படுக்கை அறைக்குள் நேராகத் தட்டுத்தடுமாறி சென்றான். கண் சொக்கியபடி கட்டிலில் தாவி ஏறி படுத்துக் கொண்டான். கூட்டாளி இல்லாததால் லூட்டி அடிக்க விருப்பம் இல்லையோ என்னவோ! ரேவதியும் கட்டிலில் அமர்ந்து இரண்டு தட்டு தட்டியவுடன் தூங்கிப் போனான்.

பெட்ரூம் கதவை லேசாக சாத்தி விட்டு ஹாலில் உட்கார்ந்து வெகு நாட்களுக்குப் பிறகு எங்களால் மனம் விட்டு நிம்மதியாகப் பேச முடிந்தது. தன் நாத்தனார் அடுத்த வாரம் ரெயிலேறி தன் புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டுப் போக இருக்கிறாள் என்றாள், ரேவதி. இதைக் கேட்டதும் என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாகவும், இதமாகவும், நிம்மதியாகவும் இருந்தது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பல சமாசாரங்கள் பேசிக்கொண்டே போனதில் பொழுது போனதே தெரியவில்லை. சூடாக ரேவதிக்குக் காஃபி கலந்து கொடுத்து விட்டு நானும் குடித்தேன்.

இந்த ரேவதி என் கல்லூரித் தோழி மட்டுமல்ல. நான் இருக்கும் இடத்தில் எனக்கு பதிலாக என் கணவருக்கு மனைவியாக வந்திருக்க வேண்டியவள். ஜாதகப் பொருத்தம் இல்லை என்று என் மாமியாரால் தட்டிக் கழிக்கப்பட்டவள்.

பிறகு அவள் சொல்லித்தான், என் தந்தை என் ஜாதகத்தைக் கொடுத்து, மிகவும் பொருந்தியிருப்பதாகச் சொன்னதனால், நான் இங்கு வாழ்க்கைப்பட ஒரு விதத்தில் உதவியவளும் கூட.

வேடிக்கை என்னவென்றால் அவளுக்கும் எனக்கும் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் திருமணம் நடந்ததால் ஒருவர் திருமணத்திற்கு ஒருவர் போக முடியாமல் போனது. வீடியோக்களைப் பார்த்து திருப்தி பட்டுக்கொண்டோம்.

இப்போது கூட என் சினேகிதி ரேவதியைப் பார்க்கும் போதெல்லாம், என் கணவருக்கு ஒரு வித உற்சாகமும், விட்டகுறை தொட்டகுறை போல ஒரு வித ஏக்கமும் ஏற்படுவதுண்டு.

திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகியும் எனக்கு இதுவரை தாய்மை அடையும் ப்ராப்தம் இல்லாமல் இருந்து வருகிறது. 


ஒரு சின்ன அல்ப சந்தோஷம் என் மனதிற்குள் என்னவென்றால், ரேவதியும் என்னைப் போலவே தான், இன்று வரை அரசமரத்தைச் சுதந்திரமாகச் சுற்றி வருபவளாக இருந்து வருகிறாள், என்பது மட்டுமே. 

இதுபோல நான் நினைக்கக்கூடாது தான் ..... தப்புத்தான் ..... ஆனால் நான் என்ன செய்வது ..... என் மனம் கிடந்து தவிக்கும் தவிப்பு எனக்கு மட்டுமே தெரியும். அவளுடன் என்னை நான் ஒப்பிட்டுப்பார்த்துத்தான், சற்றே என்னால் என்னை சமாதானம் செய்துகொள்ள முடிகிறது.

ஒரு வீடு கட்டவே நமக்குப் ப்ராப்தம் வருவதற்குள், சிலர் இரண்டு மூன்று வீடுகளுக்கு சொந்தக்காரர் ஆகி விடுவதுண்டு. அது போல ஒன்றுக்கே தவமாய் தவமிருக்கும் எங்களுக்கு, ரேவதியின் நாத்தனாருக்கு ஒரே பிரஸவத்தில் இரட்டைக் குழந்தைகள், இரண்டும் ஆண் குழந்தைகள், என்றதும் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.



குழந்தைகளுக்கு தொட்டில் இட்ட அன்று நானும் ரேவதியும் தான் அம்மிக் குழவிகளைக் குளிப்பாட்டி, அலங்காரம் செய்ய பணிக்கப் பட்டோம்.



அதுபோல செய்தால் விரைவில் வளைகாப்பு சீமந்தம் வரும் என்று நம்பிக்கையுடன் கூறினார்கள், கூடியிருந்த வயதான பெண்மணிகள்.




இது போலச் சொல்லிச் சொல்லியே பல வளைகாப்புகளில், எங்களையும் மறுமனை என்ற பெயரில் அந்தப் பிள்ளைத்தாச்சி பொண்ணுடன் மனையில் அமர்த்தி, எங்களுக்கும், மாலையிட்டு, கைநிறைய வளையல்கள் அணிவித்து, பல அம்மிக்குழவிகளை குளிப்பாட்டி, வேப்பிலை அடிக்க வைத்து விட்டனர்.

தொடர்ந்து இது போல அழைக்கப்படும் பெண்களின் மனது எவ்வளவு தூரம் பாதிப்புக்கும், அவமானத்திற்கும், உள்ளாகும் என்பதைப் பற்றி, யாரும் கொஞ்சமும் சிந்திப்பதில்லை. 


இப்போது இதிலெல்லாம் எங்கள் இருவருக்கும் சுத்தமாக நம்பிக்கை போய்விட்டது. இப்போது அதுபோல யாராவது அழைத்தாலும் ஏற்றுக் கொள்வது இல்லை. அத்தகைய விழாக்களுக்கு செல்வதையே அடியோடு நிறுத்திக் கொண்டு விட்டோம்.

இவ்வாறு ஏதேதோ எங்களின் பிரத்யேகப் பிரச்சனைகளைப் பற்றி எங்களுக்குள் தனிமையில் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த போது, பெட்ரூமிலிருந்து ஒரு மிகப்பெரிய சப்தம் கேட்டு திடுக்கிட்டு ஓடினோம்.

தொடரும்


  


குழந்தை கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டதோ என்று பயந்து ஓடிப் போய்ப் பார்த்தோம்.

கட்டிலின் ஒரு ஓரமாக சுவற்றை ஒட்டி வைக்கப்பட்டிருந்த லாப்டாப் குழந்தையால் இழுத்து கீழே தள்ளிவிடப் பட்டிருந்தது.




சுளையாக அறுபதாயிரம் ரூபாய் போட்டு புதிதாக அவர் சமீபத்தில் வாங்கியது. அவரைத் தவிர, வீட்டுக்கு வரும் யாரையும் தொடவிட மாட்டார். ஒரே ஒரு முறை என்னை விட்டு ஓபன் செய்யச் சொன்னார். எனக்கு அது சரிப்பட்டு வரவில்லை. டெஸ்க் டாப்பில் ஏதோ கொஞ்சம் பழக்கமுண்டு. அதுவும் மெயில் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்ப்பதோடு சரி. அது கூட இவர் எனக்குக் கற்றுக் கொடுத்தது தான்.

இந்தப் பழக்கமில்லாத புது சமாச்சாரங்களில் நான் கையை வைத்து ஏதாவது கோளாறு ஆகிவிடுமோ என்ற பயத்தில், நான் அதிகமாக எதுவும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

லாப்டாப்பை கீழே தள்ளிவிட்டு, கீழே விழுந்த அது என்னாச்சு ! என்ற மிகுந்த ஆவலுடன், தலையை மட்டும் வெளியே நீட்டியபடி, கட்டிலின் விளிம்பில் குனிந்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது அந்தக் குழந்தை.

குழந்தையை ஓங்கி அடிப்பது போல, தன் கையை மட்டும் ஓங்கி விட்டு, கோபமாக இரண்டு திட்டு திட்டிவிட்டு என்னைப் பார்த்து “
ஸாரிடீ ... உன் வீட்டுக்காரர் ஆபீஸ் விட்டு வரும் நேரமாச்சு, நான் புறப்பட்டுப் போகிறேன்”, என்றபடி நைஸாக கிளம்பி விட்டாள் ரேவதி.

என் வீட்டுக்காரரிடம் இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. கீழே விழுந்து கிடந்த லாப்டாப்பை பழையபடி கட்டிலில் சுவற்று ஓரமாக நகர்த்தி வைத்தேன். அதில் என்ன கோளாறு ஆகியுள்ளதோ, இனிமேல் அது வேலை செய்யுமோ செய்யாதோ, எல்லாம் அவர் வந்து பார்த்து சொன்னால் தான் உண்டு. நடந்தது நடந்து விட்டது, என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் இருந்தேன்.

ஒரு அரை மணி நேரம் ஆனதும் என் வீட்டுக்காரரும் ஆபீஸிலிருந்து வந்து விட்டார். வழக்கம் போல பாத்ரூம் போய் ஒரு குளியல் போட்டுவிட்டு, சோபாவில் அமர்ந்தார்.

நான் சூடாக சுவையாக கொடுத்த காஃபியை அவர் ரசித்து ருசித்து குடிக்கும் போது, நானும் மெதுவாக அவர் அருகில் அமர்ந்து கொண்டேன்.

“ஏதோ சொல்லத் துடிக்கிறாயே! என்ன....சொல்லு” என்றார்.

“அடிக்கடி நம் ரேவதியின் நாத்தனார் குழந்தைகள், நம் வீட்டுக்கு வந்து பாடாய்ப் படுத்துகின்றன” என்று ஒரு பீடிகையுடன் ஆரம்பித்தேன்.

“ஒரு மூன்று மாதக் குழந்தைகளாக இருந்த போது, நானும் நீயும் ரேவதி வீட்டுக்குப் போய், குழந்தைகளின் விரல்களில் சின்ன தங்க மோதிரங்கள் போட்டு விட்டு வந்தோமே, அந்தக் குழந்தைகளா!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.

“ஆமாம் அதே குழந்தைகள் தான். இப்போது ஒரே ஓட்டமும் நடையுமாக ஒரு இடத்தில் நிற்காமல் லூட்டி அடிக்கின்றன. அன்று ஒரு நாள் ரிமோட்டை எடுத்து டி.வி. மேல் விட்டெறிந்து, மயிரிழையில் மானிட்டர் உடையாமல் தப்பியது. மற்றொரு நாள் பந்தை விட்டெறிந்ததில், ஷோகேஸ் கண்ணாடி உடையாமல் தப்பியது” என்றேன்.

”குழந்தைகள் என்றால் அப்படி இப்படித்தான் .....  விஷமம் செய்வதாகத் தான் இருக்கும். அவ்வாறு விஷமத்தனம் இருந்தால் தான் அது குழந்தை. நல்லது கெட்டதோ, பொருட்களில் விலை ஜாஸ்தியானது விலை மலிவானது என்ற பாகுபாடோ, எதுவும் தெரியாத பச்சை மண்கள் அவை. 

பொருட்களின் மதிப்புத் தெரிந்த உனக்குக் குழந்தைகளின் மதிப்புத் தெரியவில்லையே” 

என்றபடியே என்னை ஒரு மாதிரி பார்த்தவர், ஏதோ ஒரு குற்ற உணர்வில், பிறகு நாக்கைக் கடித்துக் கொண்டது போல முகத்தை வைத்துக் கொண்டு, நெற்றியைக் கைவிரல்களால் லேசாகத் தட்டிக் கொண்டார்.

இவருக்கு வாழ்க்கைப் பட்ட என்னை என் அக்கம்பக்கத்தாரும், ஒரு சில உறவினர்களும் கூட ஜாடை மாடையாக மலடி என்றும், தரிசு நிலம் என்றும் கூறக் கேட்டுள்ளேன்.

சென்ற மாதம் என் வீட்டுக்கு இவரின் ஒன்று விட்ட அத்தை என்று சொல்லி கொழுப்பெடுத்தவள் ஒருத்தி வந்திருந்தாள். 


காய்கறி நறுக்குகிறேன் என்று காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு, கத்திரிக்காய் வயிற்றுக்குள் கூட புழு பூச்சி வந்திருக்கு” என்று கூறிக்கொண்டே என் முகத்தை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

“பார்த்து நறுக்குங்க, பேசிக்கொண்டே நறுக்கினால் புதிதாக சாணைபிடித்த அந்த அருவாமனை, உங்கள் கையைப் பதம் பார்த்துவிடும்” என்று சொல்லி என் எரிச்சலைக் காட்டினேன்.

ஊர் வாயை மூடமுடியாது என்று எனக்கும் தெரியும். மற்றவர்கள் போல ஜாடைமாடையாக மறைமுகமாகப் பேசாமல்,
“குழந்தைகளின் மதிப்பைப் பற்றி உனக்கென்ன தெரியும்” என்று நேரிடையாகவே, என் கணவர் இன்று என்னைப் பார்த்து கேட்டு விட்டார். இதை மட்டும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் மனதிற்குள் அழுது கொண்டேன்.

“தயவு செய்து உங்கள் லாப்டாப் வேலை செய்கிறதா என்று பாருங்கள். இன்று நம் வீட்டுக்கு வந்த அந்தக் குழந்தை, கட்டிலிலிருந்து உங்கள் லாப்டாப்பைக் கீழே தள்ளி விட்டு விட்டது. உடைந்து போய் இருக்குமோ என்று நான் பதறிப்போய் விட்டேன். ரேவதியும், தான் ஏன் குழந்தையைக் கூட்டிக் கொண்டு வந்தோம், என்று மிகவும் வேதனைப் பட்டுப் போய் விட்டாள்” என்றேன்.

பெட் ரூமுக்குச் சென்றவர், லாப்டாப்பைத் தன் மடியில் ஒரு கைக்குழந்தை போல வைத்துக்கொண்டு, எல்லாப் பக்கமும் நன்கு தடவிப் பார்த்து விட்டு, ‘ஸ்விட்ச் ஆன்’ செய்தார். மானிடர் ஸ்க்ரீன் சேவரில் அந்தக் கஷ்குமுஷ்குக் குழந்தைகள் தோன்றி சிரிக்கத் துவங்கியதும் தான், எனக்கு பாதி உயிர் வந்தது போலத் தோன்றியது.


 


நேராக பூஜா ரூமுக்குப் போய், விளக்கேற்றி நமஸ்கரித்து நான் திரும்பி வருவதற்குள், ஏதேதோ ப்ரொக்ராம்களில் புகுந்து விளையாடிப் பார்த்து விட்டு, ரேவதிக்கும் தானே போன் செய்து லாப்டாப்புக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற விஷயத்தை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

ரேவதியுடன் பேசும் போது மட்டும் இவர் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவது போல ஒரு வித பிரகாசம் அடைவதைக் கதவிடுக்கு வழியாக நான் சற்று நேரம் நின்று கவனித்துவிட்டு, பிறகு அவர்கள் பேசி முடிக்கும் சமயம், தொண்டையைக் கனைத்தபடி, பெட் ரூம் உள்ளே போனேன் .

என்னைப் பார்த்து விட்ட அவர் “கவலைப்படாதே ... லாப்டாப் உடையவில்லை” என்றார்.

“நல்ல வேளை, அதுவாவது உடையாமல் போனதே” என்றேன் மனம் உடைந்த நான்.

“உடையவும் இல்லை ..... நொறுங்கவும் இல்லை .... ஒரு சின்ன கீறல் கூட இல்லை ... நன்றாக வேலை செய்கிறது” என்றார் மீண்டும் எனக்கு ஆறுதல் கூறுவது போல.

“உடைந்து விட்டது; நொறுங்கி விட்டது; பெரிய கீறல் விழுந்து விட்டது, என் மனசு” 


என்று பெரியதாகக் கத்த வேண்டும் போல் இருந்தது எனக்கு.


oooooOooooo



அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது  தொழில்நுட்ப உலகம். இன்று கணிப்பொறி  பயன்பாடு  மிகவும் அதிகரித்துள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தங்களின் ஏதோ ஓர் தேவைக்காக கணிப்பொறியை பயன்படுத்துகின்றனர். அனைவரது வாழ்விலும் கணினி ஏதோ  ஓர் வகையில் அங்கம் வகிக்கின்றது.
அன்றாட அலுவல்கள், பணி நிமித்தம், பொழுதுபோக்கு  என்று பலவற்றிற்கும் கணினியை பயன்படுத்துகிறோம். கணினியும் இணையமும்   உலகையே சுருக்கி நம் கைகளுக்குள் கொண்டுவந்து விடுகிறது  என்பது மறுக்க முடியாத உண்மை. போகாத பொழுதை போக்க வேண்டுமா ?  அல்லது ஓய்வாக ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டுமா ? அனைத்திற்கும் " நான் இருக்கிறேன் துணையாக ! " என்று  வந்து நிற்கும் கணினி கீழே விழுந்து விட்டது.

அடக்கடவுளே ! கீழே விழுந்தது பழுதாகி விடுமோ ! வேலை செய்யாது போய்விட்டால் கணவர் கோபித்துக் கொள்வாரோ என்று கதையின் நாயகி கவலை பட, அவளது கணவரோ, தன்  குத்தல் சொற்களால், அவளது மனதை குத்திக் கிழித்து விடுகிறார்.
ஊரார் பேச்சுகளும், நமது உற்ற துணையானவர்களது பேச்சும் ஒன்றாகி விடுமா ? ஊரார் வாய்க்கு அவலாகிப் போனால், நாளை புது அவல் கிடைத்ததும், நம்மைப் பற்றிய பேச்சு அவர்களுக்கு நமநமத்துப் போய்விடும். ஆனால், இதுவே உற்றார் உதிர்க்கும்  வார்த்தைகள், அவை எவ்வித உள்நோக்கமும் இல்லாது சொல்லப் பட்டிருந்தாலும், அவை ஏற்படுத்தும் வலி மரண வலிக்கு சமமானது  அன்றோ !

ஏற்கனவே உடைந்து போய் இருக்கும் உள்ளங்களை, மேலும் சுக்கல் சுக்கலாக உடைத்து எறிவதில் சமூகத்திற்கு என்ன தான் மகிழ்வோ ? பிள்ளைச் செல்வத்திற்காக ஏங்கித் தவிக்கும் மனங்களின் இரணங்களை வார்த்தைகளால் குத்திக் கிழித்து இரசிக்கும் இரக்கமற்ற மனங்களை என்னவென்று சொல்வது !

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் " என்பது பழமொழி.  எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போய் , சமூகத்தின் கேலிப் பார்வைக்கும் பேச்சுக்கும் ஆளாகி நிற்கும் பேதை மனதில் சந்தேகமும்,  பயமும், பாதுகாப்பில்லாத் தன்மையும் குடியேறிப் போனதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது ?
"தற்செயலாக சொன்ன வார்த்தைகள் தானே, அவரிடம் வேறொரு சமயம் பேசினால், அவர்கள் எவ்வித உள்ளர்த்தமும் கொண்டு பேசவில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். எவரையும் தவறாக ஏன்  எண்ண  வேண்டும்" என்று சிலர் சொல்லலாம். அவர்கள் எவ்வித புண்படுத்தும்  உள்நோக்கமும் இல்லாமல் சொல்லியிருந்தாலும், சற்றும் சிந்தியாமல், என்ன பேசுகிறோம் என்பதை உணராமல் கொட்டும் வார்த்தைகள், மனதை புண்படுத்தியது புண்படுத்தியது தானே. என்னதான் சமாதான வார்த்தைகள் சொன்னாலும், நாவினால் சுட்ட வடு மறைந்து போய்விடுமா ?
பிள்ளைப் பேற்றுக்காய் ஏங்கித் தவிக்கும் பெண்களின் உள்ளக் கவலைகளை , சமூகம் அவர்களை படுத்தும் பாடு இவற்றை இக்கதையில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். உயிரற்ற ஜடப் பொருள்களை பத்திரமாய் பதவிசாய் பார்த்துப் பார்த்து பொத்திப் பொத்திப் பேணும் பலரும், உயிரும் உணர்வும் நிறைந்த மனித உள்ளங்களை புரிந்து கொள்வதில்லை.பொருள்களை பத்திரமாய்  காப்பவர்கள், காக்க வேண்டிய மனங்கள் நொறுங்கிப் போவதை சிறிதும் சட்டை செய்வதில்லை.
இது இன்றைய உலகில் நாளும் நாம் கண்கூடாக காணும் நிதர்சனமான உண்மை.


நல்லதோர் வாய்ப்பளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உயிரற்ற ஜடப் பொருள்களை பத்திரமாய் பதவிசாய் பார்த்துப் பார்த்து பொத்திப் பொத்திப் பேணும் பலரும், உயிரும் உணர்வும் நிறைந்த மனித உள்ளங்களை புரிந்து கொள்வதில்லை. பொருள்களை பத்திரமாய் காப்பவர்கள், காக்க வேண்டிய மனங்கள் நொறுங்கிப் போவதை சிறிதும் சட்டை செய்வதில்லை.//

மிகவும் அழகாக யோசித்து அருமையாக எழுதப்பட்டுள்ள விமர்சனம். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

தங்கள் வலைத்தளத்தில் இதனைப் பகிர்ந்து கொண்டுள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

பிரியமுள்ள கோபு [VGK]

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்..

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

Tamizhmuhil Prakasam said...

@ வை.கோபாலகிருஷ்ணன்

தங்களது வருகைக்கும் அன்பான வாழ்த்துகட்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

மிக்க நன்றி ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ இராஜராஜேஸ்வரி

இந்த விமர்சனத்திற்கு பரிசு கிடைக்கவில்லை சகோதரி. ஐயாவின் கதைகளுக்கு நான் எழுதும் விமர்சனங்கள் பரிசுக்கு தேர்வானாலும் ஆகாவிடினும் அவற்றை நான் எனது தளத்தில் பகிர்ந்து வருகிறேன்.

தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்துகட்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

Post a Comment