blank'/> muhilneel: சிங்கமும் மரங்கொத்தியும்

Thursday, February 6, 2014

சிங்கமும் மரங்கொத்தியும்



ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒருநாள், ஒரு பெரிய எருதை வேட்டையாடிய சிங்கம், அதன் உடலை கிழித்து, மாமிசத்தை உண்டது. அப்போது, எதிர்பாராத விதமாக, எருதின் கூரிய  எலும்பொன்று, சிங்கத்தின் தொண்டையில் சிக்கிக் கொண்டது.  சிங்கத்தால் அந்த எலும்பை எடுக்க இயலவில்லை. இது, சிங்கத்துக்கு மிகுதியான வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியது.

வலியால்  துடித்த சிங்கத்துக்கு, ஒரு மரங்கொத்தி உதவ வந்தது. ஆனாலும், மரங்கொத்திக்கு சிங்கத்தைக் கண்டு பயமாகத் தான் இருந்தது. எனவே, அது சிங்கத்திடம், 

" நீ எனக்கு எவ்வித துன்பமும் விளைவிக்க மாட்டேன் என்று உறுதி அளித்தால் கண்டிப்பாக உதவுகிறேன்" என்று  கூறியது.

சிங்கமும் சரி என்று உறுதியளித்தது. மரங்கொத்தியின் முன்  தன்  வாயைத் திறந்தபடி  அமர்ந்தது. மரங்கொத்தி சிங்கத்தின் வாயினுள் சென்று, அதன் தொண்டையில் சிக்கியிருந்த எலும்புத் துண்டினை, தனது நீண்ட கூரிய  அலகினால்  மெல்ல வெளியே எடுத்தது. 

சிங்கமும் மரங்கொத்திக்கு நன்றி சொல்லி, தான் கூறியபடி எவ்வித துன்பமும் விளைவிக்காமல் அதை போக  அனுமதித்தது.


சில நாட்களுக்குப் பின், சிங்கம் மற்றோர் மிருகத்தை வேட்டையாடியது. உணவு ஏதும் கிடைக்காமல், தேடியலைந்த மரங்கொத்தி, சிங்கத்தைக் கண்டது.

" மிகவும் பசியாக இருக்கிறது சிங்கமே. எனக்கு நீங்கள் வேட்டையாடிய உணவில் சிறு பங்கொன்று தந்து உதவுவீர்களா? " என்றது மரங்கொத்தி.


"உதவியா ! உனக்கு நான் உதவ வேண்டுமா ?  எதற்கு உதவ வேண்டும் ? ஏற்கனவே நான் உனக்கு மிகப் பெரிய உதவி செய்துள்ளேன் " என்று கர்ஜித்தது சிங்கம்.

ஒன்றும் விளங்காமல் சிங்கத்தைப் பார்த்தது மரங்கொத்தி. 

"என்ன சொல்கிறாய் சிங்கமே ? நீ எனக்கு உதவி செய்துள்ளாயா ? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே ? " என்றது.

" நீ என் தொண்டையில் சிக்கியிருந்த எலும்புத் துண்டை எடுத்ததும், உன்னைத் தின்று விடாது,  போக அனுமதித்தேனே , அதுவே நான் உனக்கு செய்த மிகப் பெரிய உதவி அல்லவா ! இதற்கு மேல் நீ என்னிடம் எப்படி உதவி எதிர்பார்க்கலாம் ? தப்பித்து ஓடிப் போய் விடு. இல்லையேல் உன்னை கொன்று தின்று விடுவேன் " என்று மிரட்டியது.

"நன்றி உணர்வே சிறிதும் இல்லாத உனக்கு நான் உதவி செய்தது , என் குற்றமே . நான் வருகிறேன்." என்று கூறியபடி பறந்து சென்றது மரங்கொத்தி.

நீதி: ஒருவர் செய்த உதவியை மறப்பது நல்லதல்ல.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு.
                                                    
                                                     குறள் 110.


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான கதை... தொடர வாழ்த்துக்கள்...

Tamizhmuhil Prakasam said...

தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

நல்லதொரு கதை தோழி! வாழ்த்துகள்!

Anonymous said...

நல்ல கதையும் குறளும்
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Tamizhmuhil Prakasam said...

@ கிரேஸ்

தங்களது அன்பான வாழ்த்துகட்கு மிக்க நன்றி தோழி.

Tamizhmuhil Prakasam said...

@ கோவைக்கவி

தங்களது அன்பான வாழ்த்துகட்கு நெஞ்சார்ந்த நன்றிகள் கவியே !!!

Post a Comment