blank'/> muhilneel: February 2014

Friday, February 28, 2014

காதலாவது கத்திரிக்காயாவது !

VAI. GOPALAKRISHNAN தளத்தில் எழுதி வரும் ஐயா திரு. வை. கோபாலகிருஷ்ணன்  அவர்கள் சிறுகதை விமர்சனப் போட்டி ஒன்றை நடத்தி வருகிறார்.

அவரது காதலாவது கத்திரிக்காயாவது !   சிறுகதைக்கான  எனது விமர்சனத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகு நல்வாய்ப்பினை வழங்கிய ஐயா அவர்களுக்கு  என் மனமார்ந்த நன்றிகள்.

 

 

நன்றி ! நன்றி !!  நன்றி !!!

 

 சிறுகதை 

காய்கறி விற்கும் காமாட்சியைக் காண வேண்டும் என தன் கண்கள் இரண்டும் துடிப்பதையும், கால்கள் இரண்டும் அந்தச் சின்ன மார்க்கெட்டை நோக்கி காந்தம் போல இழுக்கப் படுவதையும் கொஞ்ச நாட்களாகவே உணரத் தொடங்கியிருந்தான் பரமு.


நிறம் சுமாராகவே இருந்தும், இருபது வயதே ஆன காமாட்சி நல்ல ஒரு அழகி. 


பளிச்சென்ற தீர்க்கமான முகம். நல்ல உயரம். சகல சாமுத்ரிகா லக்ஷணங்களுடன் கூடிய உடல்வாகு கொண்டு பூத்துக்குலுங்கும் பருவ வயதுப்பெண். 

அவளைப் பார்ப்பவர்களுக்கெல்லாம், உற்சாக பானம் ஏதும் அருந்தாமலேயே, அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு வித ‘கிக்’ ஏற்படுவதும் உண்டு.


கை தேர்ந்த சிற்பி ஒருவரால், செதுக்கப்பட்ட பொற்சிலை போலத் தோன்றுகிறாளே ! இன்னும் சற்று கலராக மட்டும் இவள் இருந்திருந்தால், யாராவது சினிமாவில் புதுமுகக் கதாநாயகியாக்க கூட்டிப் போயிருப்பார்களோ என தனக்குள் நினைத்துக் கொண்டான் பரமு.


சிறு வயதிலேயே தாயை இழந்தவன் பரமு. அவனுக்கு உடன் பிறப்புகள் யாருமில்லை. கல்லூரிப் படிப்பை முடித்து ரிசல்ட் வரும் முன்பே ஒரே ஆதரவாக இருந்த தந்தையும் போய்ச் சேர்ந்து விட்டார். பெண்களுடன் கொஞ்சமேனும் பேசிப் பழகிப் பழக்கமில்லாத பரமுவுக்கு, இந்தக் காய்கறிகள் விற்கும் காமாட்சியிடம் மட்டும் ஒரு வித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதற்கு காரணமே, அந்த ஊரில் இருந்த மிகப் பெரியதொரு காய்கறி மார்க்கெட் மட்டுமே.


தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள பரமு அவ்வப்போது தமிழில் வெளியாகும் வார இதழ், மாத இத்ழ் முதலியவற்றிற்கு சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள் என அனுப்பி அதில் வரும் சன்மானத் தொகையிலும், தற்சமயம் மாணவர்கள் தங்கிப் படித்து வரும் விடுதியின் மெஸ் ஒன்றில் தற்காலிகமாக வேலை பார்த்து, அதில் கிடைக்கும் சொற்ப சம்பளத்திலும் காலம் தள்ளி வருபவன். மேலும் தன் படிப்புக்கு ஏற்ற நல்லதொரு வேலை கிடைக்க மனுக்கள் போட்டுக் காத்திருப்பவன். அந்த மெஸ்ஸிலேயே தங்கிக்கொண்டு, தானும் மாணவர்களுடன் அங்கேயே சாப்பிட்டும் வந்தான்.


தினமும் மெஸ்ஸுக்கு வேண்டிய காய்கறிகள், வாங்க மொபெட் ஒன்றில் விடியற்காலமே பெரிய மார்க்கெட்டுக்குச் சென்றிடுவான். 


சின்ன மார்க்கெட்டில் காய்கறிக் கடை போட்டிருக்கும் காமாட்சியும், பெரிய மார்க்கெட்டுக்கு, மொத்த விலையில் காய்கறிகள் கொள்முதல் செய்ய வந்திடுவாள்.


ஆரம்பத்தில் சாதாரணமாக இது போன்ற சந்திப்புக்கள் பரமுவுக்கும் காமாட்சிக்கும் பெரிய மார்க்கெட்டில் ஏற்பட்டு வந்தன.


பெண்களுடன் பேசவே மிகவும் கூச்சப்படும் பரமுவுடன், காமாட்சிதான் இழுத்துப் பிடித்து பேசி வந்தாள். நாளடைவில் பரமுவுக்கு காமாட்சி மேல், அவனையும் அறியாமல் ஏதோ ஒரு வித பாசமும், நேசமும் மலரத் தொடங்கியது. 


அனாதை போன்ற தன்னிடமும் அன்பு காட்டி பேச ஒருத்தி, அதுவும் பூத்துக்குலுங்கும் இளம் வயதுப் பருவப் பெண். கனவுலகில் மிதக்க ஆரம்பித்தான் பரமு.


நாளடைவில் காமாட்சியின் காய்கறிக் கூடைகளையும், சாக்கு மூட்டைகளையும், பெரிய பெரிய பைகளையும் முடிந்த வரை பரமுவே, தன் மொபெட் வண்டியில் சுமந்து கொண்டு வருவதும், மீதியை அவள், பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு வருவதுமாக, அவர்களின் நட்பு தொடர ஆரம்பித்தது.


இப்போதெல்லாம் காமாட்சி பெரிய மார்க்கெட் பக்கம் வருவதில்லை. எல்லாமே பரமு பாடு என்று விட்டுவிட்டாள். இதனால் இருவருக்குமே லாபமாகவே இருந்தது. பஸ் சார்ஜ், லக்கேஜ் சார்ஜ் எனத் தனித்தனியே செலவு இல்லாமல், காய்கறிகளுக்கான கொள்முதல் விலைகளுடன், பரமுவின் வண்டிக்கு ஆகும் பெட்ரோல் செலவுக்கு மட்டும், தன் பங்கைக் கணக்கிட்டுப் பகிர்ந்து கொண்டாள், காமாட்சி.


சின்ன மார்க்கெட்டில் காமாட்சியின் காய்கறி வியாபாரம் நாளுக்கு நாள் நன்றாகவே நடைபெற்று வந்தது. காரணம், பரமு வாங்கிவரும் பச்சைப்பசேல் என்று பளிச்சென்று உள்ள தரமான காய்கறிகள், நியாயமான விலை, சரியான எடை, வாடிக்கையாளர்களை வளைத்துப் பிடித்து, சுண்டியிழுக்கும் காமாட்சியின் கனிவான பேச்சு முதலியன. எட்டாவது வரை மட்டும் படித்துள்ள போதும், கணக்கு வழக்கில் புலியான காமாட்சியை யாரும் எளிதில் ஏமாற்றி விட முடியாது.


இருந்தும் அன்றாடம் மிரட்டி, உருட்டி பணம் பறித்து வரும் பேட்டை ரெளடிகள், முனிசிபாலிடி பேரைச் சொல்லி ரசீது கொடுக்காமல் தண்டல் வசூலிப்பவன். ஓஸியில் காய்கறிகளை அள்ளிச்செல்லும் காக்கிச் சட்டைக்காரர்கள், கடனில் காய்கறி வாங்கிச் சென்று, கடனைத் திருப்பித் தராத அடாவடிகள் போன்றவர்களைச் சமாளிக்க இளம் வயதுப் பெண்ணான காமாட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது.தன் பக்கத்து நியாயத்திற்கு ஆதரவாக இந்த சமூக விரோதிகளைத் தட்டிக் கேட்க, தனக்கென்று ஒரு துணை இல்லையே என்று மனதில் வேதனைப்பட்டு வந்தாள்.


அதிகாலையில் எழுந்து குளித்து, சாமி கும்பிட்டு விட்டு, தூய்மையான மிகவும் எளிமையான உடையுடன் கடையை விரித்து அமர்ந்தால், மதியம் பன்னிரெண்டு மணி வரையிலும், பிறகு மாலை நான்கு மணி முதல் இரவு எட்டு மணி வரையிலும், அந்தச் சின்ன மார்க்கெட்டில், இவள் கடையில், காய்கறி வியாபாரம் சக்கை போடு போடும்.“தள தளன்னு இருக்கே தக்காளி .... யாழ்ப்பாணம் சைஸுக்கு தேங்காய்கள் இருக்கே .... ரேட்டு எவ்வளவு?” இவள் மேனியில் தன் கண்களை மேயவிட்டவாறே, ஒரு கேலிச் சிரிப்புடன், அன்றொருநாள் அந்த நடுத்தர வயதுக்காரன், கிண்டலாகக் கேட்டபோது, காமாட்சி பத்ரகாளியாகவே மாறி விட்டாள். 


அவள் தன் கையில் வைத்திருந்த தராசுத் தட்டை சுழட்டி அவன் மேல் அடிக்க எழுந்த போது, அந்த சின்ன மார்க்கெட்டே அதிர்ந்து போனது. 


வந்திருந்த ஜொள்ளுப் பார்ட்டியும், அவளிடம் வாங்கிய ஒரே அடியில் போதை தெளிந்தவனாக, மேலும் அங்கு நின்றால் தனக்கு விழக்கூடும் தர்ம அடிகளிலிருந்து தப்பிக்கத் தலைதெரிக்க ஓடிவிட்டான். 


இந்த சம்பவம் நடந்த நாளிலிருந்து காமாட்சியிடம் யாரும் எந்த வம்புக்கும் செல்வதில்லை.


அன்று நடந்த இந்த விஷயத்தை, தைர்யமாக காமாட்சி வாயாலேயே சொல்லிக் கேட்ட பரமுவுக்கும் அவளிடம் ஒரு வித பயம் ஏற்பட்டது. 


தன்னுடைய வாலிப வயதுக்கேற்ற ஆசைகளை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு, ’நமக்காவது .... காதலாவது .... கத்திரிக்காயாவது ....’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, பெரிய மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்திருந்த கத்திரிக்காய் மூட்டையை காமாட்சியிடம் ஒப்படைத்து விட்டு புறப்படலானான். 


ஆனால் அவன் மனம் மட்டும் காமாட்சியையே சுற்றிச்சுற்றி வந்து, ஒரு தலைக் காதல் செய்து வந்தது.


படித்த பக்குவமான பண்புள்ள இளைஞனான பரமு மேல் காமாட்சிக்கும் உள்ளூர பாசமும், நேசமும் அதிகம் உண்டு. 


இருவரும் சந்தித்து உரையாடும் போது, அவரவர் கஷ்டங்களையும், வாழ்க்கையில் இதுவரை நிறைவேறாத சின்னச் சின்ன ஆசைகளையும் பகிர்ந்து கொள்வதுண்டு.


பரமுவின் நட்பினால், காமாட்சிக்கு பெரிய மார்க்கெட் செல்லும் வேலை இல்லாமல், வியாபாரத்திலேயே முழு கவனமும் செலுத்த முடிந்தது. 


பரமுவுக்கு மட்டும், அவன் படித்த படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைத்து விட்டால், காமாட்சியை பிரிந்து செல்ல நேரிடும். அது போல ஒரு பிரிவு ஏற்பட்டு விட்டால் ! நினைத்துப் பார்க்கவே இருவருக்கும் மனதுக்குள் மிகவும் சங்கடமாகவே இருந்தது.


குடிசை வீட்டில் சிம்னி விளக்குடன் குடியிருந்த காமாட்சி, ஜன்னல் உள்ள ஓட்டு வீட்டில் மின்சார விளக்கு, ஃபேனுடன், வாடகைக்கு குடி போகும் அளவுக்கு, அவளின் காய்கறி வியாபாரம் கை கொடுத்து உதவியது.


இருப்பினும் சிறு வயதில் பட்டுப்பாவாடை கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட காமாட்சிக்கு, அது நிறைவேறாமலேயே போய் விட்டது. அவள் பூப்பெய்தின போது கூட, அவள் அம்மா பல இடங்களில் பணம் புரட்டி, சாதாரண சீட்டிப்பாவாடை, சட்டை, தாவணி வாங்கிக் கொடுத்தது, காமாட்சிக்கு இன்றைக்கும் பசுமையாக நினைவிருக்கிறது.


அவள் அம்மாவும் என்ன செய்வாள் பாவம்? கணவனை ஒரு சாலை விபத்தில் பறிகொடுத்து, இளம் விதவையான அவள், கடைசியில் தன் தள்ளாத வயது வரை, காய்கறிக்கூடை ஒன்றை தலையிலும், இடுப்பிலும் சுமந்தபடி வீடு வீடாகச் சென்று காய்கறி விற்றுப் பிழைத்து வந்தவளே.


காமாட்சியின் தாயாரும் ஒரு நாள் மிகவும் உடம்பு முடியாமல் படுத்து, மறுநாளே, எட்டாவது வகுப்பு முழுப்பரீட்சை எழுதி முடித்து விட்டு வந்த  காமாட்சிக்கும் அதிக சிரமம் கொடுக்காமல் போய்ச் சேர்ந்ததில், காமாட்சி ஒரு அனாதை போல ஆகிவிட்டாள். 


படிப்பைத் தொடர முடியாமல் அம்மா செய்து வந்த காய்கறி வியாபாரத்தையே தானும் செய்ய அன்று ஆரம்பித்தவள் தான். சுமார் ஏழு வருடங்கள் விளையாட்டு போல ஓடிவிட்டன.


பட்டுப்பாவாடைக்கு ஆசைப்பட்ட அவளின் சிறுவயது ஆசை அலைகள் இன்றும் ஓயாமல் காமாட்சியை துரத்தி வருகின்றன. எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் நியாயமான ஆசைதான் காமாட்சிக்கும்.


இடுப்பில் கட்டிகொள்ள ஒரு பட்டுப்புடவையும், கழுத்தில் போட்டுக்கொள்ள இரண்டு பவுனில் ஒரு தங்கச் சங்கலியும் வாங்க வேண்டும் என்பதே அவளின் இன்றைய ஆசை. அதற்கான தொகையையும் சிறுகச்சிறுக சேமிக்கத் தொடங்கி விட்டாள்.


காமாட்சியின் அன்றாட லாபமும் சேமிப்பும் உயர உயர, தங்கம் விலையும் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து வந்ததில் அவள் ஆசை இதுவரை நிறைவேறாமலேயே உள்ளது. சாண் ஏறினால் முழம் சறுக்குது.


தன்னுடைய இந்தச் சின்னச் சின்ன ஆசைகளையெல்லாம் பரமுவிடம் அவ்வப்போது சொல்லிக் கொள்வாள். 

பரமுவும் தான் படித்த படிப்புக்கேற்ற நல்லதொரு வேலை இதுவரை கிடைக்காமல் இருப்பதையும், பல இடங்களுக்கு மனுப் போட்டும், எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு என்று சென்று வருவதையும் காமாட்சியிடம் சொல்லி வருத்தப் பட்டுக் கொள்வான்.


அன்றொரு நாள் அதிகாலையில் வழக்கம் போல காய்கறி மூட்டைகளையும் பெரிய பெரிய பைகளையும் தனது மொபெட்டில் ஏற்றியபடி வேகமாக வந்த பரமு, சின்ன மார்க்கெட்டில் உள்ள காமாட்சியின் கடை அருகே, பிரேக் அடித்து சமாளித்து நிறுத்துவதற்குள், பின்னால் வேகமாக துரத்தி வந்த ஆட்டோ ஒன்று, கவனக்குறைவால், பரமுவின் வண்டி மேல் மோதிவிட, பரமு மொபெட்டிலிருந்து சரிந்து கீழே விழ, காய்கறிகள் யாவும் ஆங்காங்கே சிதறி, அங்கு ஒரு பெரிய கும்பலே கூடி விட்டது. 


இதைப் பார்த்து ஓடி வந்த காமாட்சியும், மோதிய ஆட்டோக்காரருமாக, காலில் காயம் பட்டிருந்த பரமுவை அதே ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த மருத்துவ மனைக்குக் கூட்டிச் சென்றனர்.


இடது முழங்கால் பகுதியில் நல்ல அடிபட்டு வீங்கிப் போய், ஒரு வாரமாக படுத்த படுக்கையாகி விட்டான் பரமு. வலது உள்ளங்காலையும் ஊன முடியாமல் வலி உள்ளது. 


எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் நல்ல வேளையாக எலும்பு முறிவு ஏதும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.


காமாட்சி தான், மூன்று வேளையும் தன் கைப்பட சமைத்த உணவினை எடுத்துப்போய், மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து, ஆஸ்பத்தரிச் செலவுகளையும் சமாளித்து வருகிறாள்.


பட்டுப்புடவை மற்றும் தங்கச் சங்கிலிக்கான சேமிப்பு தான், ஆபத்திற்கு இப்போது கை கொடுத்து உதவுகிறது. 


பரமுவின் உதவி இல்லாததால், காய்கறி கொள்முதல் செய்ய பெரிய மார்க்கெட்டுக்கு இவளே போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. நிழலின் அருமை வெயிலில் சென்றால் தான் தெரியும் என்பது போல, பரமுவின் அருமையை இப்போது நன்றாகவே உணர முடிந்தது காமாட்சியால்.


இன்னும் இரண்டு நாட்களில் பரமு பழையபடி வலியில்லாமல் நடக்க ஆரம்பிக்க முடியும் என்றார், பரமுவுக்கு பிஸியோதெரபி பயிற்சி அளிப்பவர். 


சீக்கிரமாகவே பரமு குணமாகி வரவேண்டி, காமாட்சியும் வேண்டாத தெய்வம் இல்லை.


மறுநாள் பரமுவுக்கு வந்ததாகச் சொல்லி மெஸ்ஸில் தங்கியுள்ள ஒரு பையன் கொடுத்த இரண்டு கடிதங்களை எடுத்துக்கொண்டு, சாப்பாட்டுத் தூக்குடன் ஆஸ்பத்தரிக்குப் போனாள், காமாட்சி.


போகும் வழியில், ஆஸ்பத்தரிக்கு மிக அருகில் உள்ள அரச மரத்துப் பிள்ளையார் கோவிலில் அபிஷேக அலங்காரங்கள் முடித்து, சூடான சர்க்கரைப் பொங்கல் விநியோகம் நடந்து கொண்டிருந்தது. 

பிள்ளையாரை வேண்டிக்கொண்ட காமாட்சி, ஒரு தொன்னையில் பிரசாதப் பொங்கலையும் வாங்கிக்கொண்டு போய் பரமுவிடம் நீட்டினாள்.


“வா, காமாட்சி! என்ன விஷயம்! இனிப்புடன் வந்துள்ளாய்?” பரமு கேட்டான்.


”ஒரு விசேஷமும் இல்லை. பிள்ளையார் கோவிலில் பிரஸாதமாகக் கொடுத்தார்கள்” என்றாள், பரமுவுக்கு வந்த இரண்டு கடிதங்களையும் நீட்டியபடி.


முதல் கவரைப் பிரித்துப் பார்த்த பரமு, “ஆஹா, மிகவும் இனிமையான செய்தி தான்; சர்க்கரைப் பொங்கல் விசேஷமாகத் தான் கொண்டு வந்துள்ளாய்; நான், அந்த வாரப்பத்திரிக்கை நடத்திய ஒரு சிறுகதைப் போட்டிக்கு “காதலுக்கு உதவிய காய்கறிகள்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருந்தேன்; அது முதல் பரிசுத் தொகையான ஐயாயிரம் ரூபாய்க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம். உடனடியாக புகைப்படம் ஒன்றும், சுய விபரக் குறிப்பு ஒன்றும் அனுப்பி வைக்க வேண்டுமாம்” என்றான்.


காமாட்சி புன்னகையுடன், கண்களை அகலமாக விரித்து, அவனை நோக்கினாள்.


இரண்டாவது கவரையும் அவசரமாகப் பிரித்தான், பரமு. அவன் முகத்தில் இப்போது கோடி சூரிய பிரகாஸம். அரசுடமையாக்கப் பட்ட வங்கியொன்றில் நிரந்தர வேலைக்கு நியமனமாகியுள்ளதாகத் தகவல். மருத்துவப் பரிசோதனைக்கு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரச் சொல்லி உத்தரவு வந்துள்ளது.


கால் வலி மறந்து போய் துள்ளிக்குதிக்கிறான் பரமு. தபாலைக் கொண்டு வந்து கொடுத்த காமாட்சியின் கைகள் இரண்டையும் பிடித்துத் தன் கண்கள் இரண்டிலும் ஒத்திக் கொள்கிறான்.


பரமுவை இவ்வளவு மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் காமாட்சி இதுவரை பார்த்ததே இல்லை. அவளுக்கும், பரமுவுக்கு நல்ல வேலையொன்று நிரந்தரமாகக் கிடைத்ததில் ரொம்பவும் சந்தோஷமாகவே இருந்தது.


“எந்த ஊருக்குப் போய் வேலையில் சேரும்படி இருக்கும்?” என்று அவள் கேட்கும் போதே, அவளின் கண்களில் நீர் தளும்ப, ஏதோ தூசி கண்ணில் விழுந்து விட்டது போல, தன் புடவைத் தலைப்பால், துடைத்துக் கொள்கிறாள்.


“திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் வேலைக்குக் காலியிடம் இருப்பதாகவும், ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் படியும் சொல்லியிருந்தார்கள். நான் நம்ம உள்ளூராகிய திருச்சி மாவட்டத்தைத் தான் தேர்ந்தெடுத்திருந்தேன்” என்றான்.

[அதுவும் உனக்காகவே தான் என்று மனதுக்குள் கூறிக்கொண்டான் ]“ஒரு வேளை வெளியூரில் வேலை கிடைத்திருந்தால் என்னை அம்போ என்று விட்டு விட்டுப்போய் விடுவாய் தானே?” என்றாள், காமாட்சி.


[என்னையும் உன் கூட கூட்டிக் கொண்டு போக மாட்டாயா?   என மனதுக்குள் ஏக்கத்துடன் கூறிக் கொண்டாள் ][” நீ என்னுடன் வருவாய் என்றால் வெளியூர் என்ன, வெளிநாடு என்ன, அந்த சந்திர மண்டலத்துக்கே கூட கூட்டிப் போகத் தயாராக இருக்கிறேன்” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு ]“நீ கடந்த ஒரு வாரமாகச் செய்துள்ள உதவிகளுக்கு, உன்னை அம்போ என்று என்னால் எப்படி விட முடியும்?” என்று சொல்லியபடியே, காமாட்சியை வைத்த கண் வாங்காமல், புன்னகையுடனும், நன்றியுடனும் நோக்கினான், பரமு.“அது சரி, முதல் மாத சம்பளம் வாங்கி என்னய்யா செய்யப் போறே?” காமாட்சி வினவினாள்.


“எனக்குப் பிடித்த காமாட்சி அம்மனுக்கு, பட்டுப் புடவையும், கால்களுக்கு கொலுசும் வாங்கி சாத்தப் போறேன்” என்றான் பரமு.“அப்புறம்” என்றாள், காமாட்சி.“அப்புறம், ஒரு ஆறு மாத சம்பளத்தைச் சேர்த்து, காமாட்சி அம்மன் கழுத்துக்கு இரண்டு பவுனில் ஒரு தங்கச் செயினும், ஒவ்வொரு கைக்கும் ஒரு ஜோடி வீதம் தங்க வளையலும், காதுக்குத் தங்கத் தோடும், மூக்குக்கு தங்க மூக்குத்தியும் வாங்கிப் போடுவேன்” என்றான்.


“அப்புறம்” என்றாள் காமாட்சி.“அப்புறம் என்ன, என் மனசுக்குப் புடிச்சவளாகப் பார்த்து கல்யாணம் கட்டிக் கொள்வேன்” என்றான் பரமு.“உன் மனசுக்குப் பிடித்தவளுக்கு உன்னைப் பிடிக்க வேண்டாமாய்யா ?” என்றாள் காமாட்சி.“அதற்கும் அந்தக் காமாட்சி அம்மன் கருணை வைத்தால் தான் முடியும்” என்றான் பரமு.“என்னய்யா நீ, எதற்கு எடுத்தாலும், காமாட்சி அம்மன்னே சொல்லிக்கிட்டு இருக்கே; எங்கேய்யா இருக்கா அந்தக் காமாட்சி அம்மன்?” என்று பொறுமை இழந்து கேட்டாள் காமாட்சி.“அவள் எங்கும் நிறைந்தவள். எப்போதும் என் மனதில் குடி கொண்டு இருப்பவள்; எனக்குப் பக்கத்திலேயே எப்போதும் .... ஏன் இப்போது கூட நிற்பவள்; என் கண்களுக்குத் தெரிகிறாள்; உனக்குத் தெரியலையா? புரியலையா? .... அல்லது புரிந்தும் புரியாதது போல நடிக்கிறாயா?” என்றான் பரமு.வெட்கத்தால் காமாட்சியின் முகம் சிவந்தது. கீழே குனிந்த வண்ணம் கால் விரல்களால் தரையில் கோலம் போடுகிறாள்,
 பரமுவுடன் தன் திருமணக் கோலத்தை மனதில் எண்ணியபடி.


“முதல் பரிசு வாங்கும் அளவுக்கு அப்படி என்னய்யா அந்தச் சிறுகதையில் எழுதியுள்ளாய்?” காமாட்சி, தலை நிமிர்ந்து ஆர்வமுடன் கேட்கிறாள்.


“அதில் வரும் கதாநாயகனுக்கு, கதாநாயகி மேல் தீராத காதல். அந்தக் காதலைக் கசக்கிப் பிழிந்து, ஜூஸ் ஆக்கி, படிக்கும் வாசகர்கள் அனைவரும் விரும்பிக் குடிக்கும் விதமாக அணு அணுவாக நான் அனுபவித்து வந்த உணர்வுகளை அப்படியே எழுதியுள்ளேன்; கதை வெளி வந்ததும் நீயே படித்துப் பார் தெரியும்” என்றான் பரமு.

 
இவ்வளவு ஆசையை மனதில் போட்டுப் பூட்டி வைத்து எப்படிய்யா வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைக்க முடிந்தது உன்னால்? அதைக் கொஞ்சமாவது என்னிடமும் வெளிப்படுத்தியிருந்தால்,என் மனசும் சந்தோஷப்பட்டிருக்கும் தானே? ஏனய்யா என்னிடம் எப்போதும் பட்டும் படாததுமாகவே பழகி வந்தாய்?” என்று கேட்டாள் காமாட்சி.


“எல்லாம் ஒரு வித பயம் தான் காமாட்சி. அன்னிக்கு உன்னிடம் வம்பு செய்த அந்த ஆளை, தராசுத்தட்டைச் சுழட்டி ஓங்கி அடித்தேன் என்று நீ தானே என்னிடம் சொன்னாய் ! அது போல என்னையும் நீ தாக்கினால் நான் என்ன செய்வது என்ற பயம் தான்” என்றான் பரமு.


இதைக் கேட்டதும், கடகடவென்று கன்னத்தில் குழி விழச் சிரித்த காமாட்சி, பரமுவின் கன்னம் இரண்டையும் தன் இரு கை விரல்களாலும் செல்லமாகக் கிள்ளி விட்டாள்.


அவள் இவ்வாறு  
பச்சைக்கொடி காட்டியதும், பயம் தெளிந்த பரமு மட்டும் சும்மா இருப்பானா என்ன !


ஆஸ்பத்தரியின் அறை என்றும் பார்க்காமல் காமாட்சியை அப்படியே அலாக்காகத் தூக்கி தட்டாமாலை சுற்ற ஆரம்பித்து விட்டான்.

இவர்களின் ஜாலி மூடைப் பார்த்ததும் 'கெளலி' அடித்தபடி இரண்டு பல்லிகள் ஒன்றை ஒன்று துரத்தியபடியே, குஷியாக அந்த அறையின் சுவற்றில் இங்குமங்கும் ஓட ஆரம்பித்தன.


oooooOoooooஎனது விமர்சனம்

காதலாவது கத்தரிக்காயாவது என்ற இக்கதையில் ஆசிரியர் பரமு காமாட்சி இடையே மலரும் அழகான காதலை சொல்கிறார்.

பெண்களிடம் அவ்வளவாகப் பேசிப் பழக்கமில்லாதவன் பரமு.கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவன்.அனாதை என்ற எண்ணம் கொண்ட பரமுவிற்கு, காமாட்சி அவன் மீது காட்டும் அன்பினால்,அவள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.ஆனால், அவனுக்கோ பயம். ஏனெனில், அவளிடம் எவரேனும் தவறாக நடக்க எத்தனிப்பதாக அவளுக்குத் தோன்றினால், கோபத்தில் அவர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிடும் அவளது குணம். தானும் தன் காதலை சொல்லப் போக, அதை காமாட்சி ஏதேனும் தவறாக எண்ணி விடுவாளோ என்றெண்ணி அமைதி காக்கிறான் பரமு.

காமாட்சி பரமு இருவருமே ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக நடந்து கொள்ள அங்கு ஓர் நல்ல நட்பு நிலவுகிறது.

ஒரு பெண்ணுக்கு நியாயமாக மனதில் தோன்றும் ஆசைகளை காமாட்சியின் வாயிலாகச் சொல்கிறார் ஆசிரியர். ஆம், அது புடவை மீதும் நகை மீதும் ஏற்படும் ஆசை தான். அதற்காக, தன் வருமானத்திலிருந்து சேமித்தும் வருகிறாள். அந்தச் சேமிப்பே பிறிதொரு நாளில் ஏற்பட்ட அவசரத் தேவைக்கு கைகொடுத்தும் உதவுகிறது.

எப்போதும் உடன் ஒத்தாசையாய் இருப்பவர்களது அருமை, அவர்கள் அருகில் இல்லாதபோது தான் தெரியும் என்ற உண்மையை, பரமு விபத்தொன்றில் சிக்கிக் கொண்ட போது காமாட்சி உணர்ந்து கொள்வதாக சித்தரிக்கிறார் ஆசிரியர்.

காமாட்சியின் சேமிப்பாக இருந்த கையிருப்பே மருத்துவ சிகிச்சைக்கு கைகொடுத்து உதவுகிறது.

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது பழமொழி. அதற்கேற்ப, பரமுவிற்கு ஒரே சமயத்தில் இரு நல்ல விஷயங்கள் நடக்கின்றன. பரமு எழுதிய சிறுகதைக்கு ஐயாயிரம் ரூபாய் முதல் பரிசாக கிடைக்கிறது.அதே சமயத்தில், அரசுடைமையாக்கப் பட்ட வங்கி ஒன்றில் நிரந்தர வேலை ஒன்றும் கிடைக்கிறது.

அந்தச் சூழலில் தன் மனதில் உள்ள காதலை பரமு வெளிப்படுத்தும் விதம் மிகவும் அருமையாக ஆசிரியரால் கையாளப்பட்டுள்ளது.காமாட்சியை அம்மனாக உருவகம் செய்து, அம்மனுக்கு பட்டுப் புடவை, தங்கச் சங்கிலி, தோடு, மூக்குத்தி,கொலுசு அனைத்தும் சூட்டி அழகு பார்க்கப் போவதாக சொன்ன விதம் மிகவும் அருமை.

காமாட்சி அம்மன் கருணையாலேயே தனது காதல் நிறைவேறும் என்று சொல்லுமிடத்தில், காமாட்சியையே அம்மனாக பரமு உருவகித்துக் கொண்டதாக சொன்னது அழகு.

மொத்தத்தில், இரு இளம் உள்ளங்களில் உதயமான உன்னதமான காதல் ஒன்றை இந்த காதலாவது கத்தரிக்காயாவது கதையில் அழகாக சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-03-03-third-prize-winner.html


 நல்வாய்ப்பளித்த திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும், எனது விமர்சனத்தை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும்  நன்றிகள் !!!


Ink Blot Paintings

The inkblot test (also called the "Rorschach" test) is a method of psychological evaluation. Psychologists use this test in an attempt to examine the personality characteristics and emotional functioning of their patients.
Materials Required:

Paper
Acrylic Paint / Water color  ( Here I've used water color)

Method:

1. Fold a piece of paper in half.
2. Apply some paint on one side of the paper.
3. Fold the other side over the top of the paint and press down.
4. Rub the folded paper.
5. Open it up. The paint on one side of the paper will form its impression on the other side of the paper.

Monday, February 24, 2014

அதிலென்ன சந்தேகம் ?உறையூர் கிராமத்தில் பொன்னன் என்றொருவன் வசித்து வந்தான். அவன் மற்றவர்களை ஏமாற்றியே தனது ஜீவனத்தை நடத்தி வந்தான். அந்த கிராமத்தில் அவனது குணம் அறிந்த எவரும் அவனுக்கு  உதவுவதற்கு முன்வரவில்லை. அவனது மூளை குறுக்கு வழியில் சிந்திக்க ஆரம்பித்தது. எந்த கஷ்டமும் இல்லாமல்  பணம் சம்பாதிக்க வழி உண்டா என்று சிந்திக்க ஆரம்பித்தான். அவனது குறுக்கு புத்தி மூளையில் ஒரு யோசனை உதித்தது.

வாரக் கடைசியில் கூடும் சந்தைக்குச் சென்றவன், சந்தையிலிருந்து ஒரு பச்சைக் கிளியை வாங்கி வந்தான். கிளிக்கு "அதிலென்ன சந்தேகம் ? " என்ற ஒற்றை வாக்கியத்தை மட்டும் பேசக் கற்றுக் கொடுத்தான். ஒரு சில நாட்களில், கிளியும் அவ்வார்த்தையை நன்கு கற்றுக் கொண்டது. அவன் என்ன கேட்டாலும் கிளி அந்த ஒற்றை வாக்கியத்தை மட்டுமே சொல்லும்.

சந்தை கூடும் ஒரு நாளுக்கு முன்னதாக சந்தை மைதானத்திற்குச் சென்ற பொன்னன், சந்தையின் ஒரு சில இடங்களில், பூமிக்கடியில் சில தங்க நாணயங்களையும், வெள்ளி நாணயங்களையும் புதைத்து வைத்தான். தான் நாணயங்களை புதைத்து வைத்த இடங்களில், அவனுக்கு மட்டும் புரியும் வண்ணம் சில குறியீடுகளையும் இட்டு வைத்தான்.

அடுத்த நாள், சந்தை கூடியதும், தனது கிளியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு, 

" அதிசயக் கிளி ! அதிசயக் கிளி ! " 

"மண்ணுக்குள் மறைந்திருக்கும் புதையல் பற்றிய விபரங்கள் அறிந்த அற்புதக் கிளி . வாருங்கள் ! வாருங்கள் ! " 

என்று கூவ ஆரம்பித்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் பொன்னனைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் கூட ஆரம்பித்தது.

"இந்த பச்சைக்  கிளி எப்படியப்பா மண்ணுக்குள் இருக்கும் புதையல் பற்றி சொல்லும் ? " என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க,

"இங்கு எங்கேனும் புதையல் இருக்கிறதா பார்க்கலாம் வாருங்கள் " என்றபடி கூட்டத்தை தன பின் அழைத்துச் சென்றான் பொன்னன்.

தான் ஏற்கனவே நாணயங்கள் புதைத்து வைத்த இடத்திற்குச் சென்றவன் , கிளியைப் பார்த்து, 

"என் அருமை பச்சைக் கிளியே ! இங்கு புதையல் இருக்கிறதா ? " என்றான்.

உடனே கிளியும் சட்டென்று " அதிலென்ன சந்தேகம் ! " என்று தன்  கீச்சுக் குரலில் சொன்னது.

உடனே அவ்விடத்தை தோண்டிப் பார்க்க, அவ்விடத்தில் பொன்னன் ஏற்கனவே புதைத்து வைத்த தங்கக் காசுகளும் வெள்ளிக் காசுகளும் இருந்தன.

"ஆஹா ! அற்புதக் கிளி ! அதிசயக் கிளி ! " என்று கூட்டம் ஆர்ப்பரித்தது.

" என்ன விலை ? " என்று கூட்டத்தில் ஒருவர் விசாரிக்க,

"ஐயாயிரம் பொன் ! " என்றான் பொன்னன்.

விலையைக் கேட்டதும் கூட்டம் பின்வாங்கியது. அப்போது கூட்டத்தை பிளந்து கொண்டு ஒருவன் வந்தான். அவன் தான் தனவந்தன்  செங்கையன். 

"விலை என்னப்பா சொன்ன ? " என்று கேட்டான் செங்கையன்.

மீண்டும்  "ஐயாயிரம் பொன் ! " என்றான் பொன்னன்.

உடனே, மறு பேச்சு ஏதுமில்லாமல் செங்கையன்  ஐயாயிரம் பொன் கொடுத்து கிளியை வாங்கிக் கொண்டான்.

செங்கையன்  ஓர் பெரும் தனவந்தன். எச்சில் கையால் கூட ஈ  ஓட்டாதவன். எவருக்கும் எவ்வித உதவியும் செய்ய  மாட்டான். கிடைக்கும் பணத்தை எல்லாம் கஜானாவில் பூட்டி வைத்து, அதனை அவனே இராப்பகலென கண்விழித்து காவல் காத்து வந்தான்.மென்மேலும் பணம் சேர்க்க மட்டுமே விரும்பியவன், அவன் கையில் இருந்து ஒரு பைசா செலவழிப்பதைக் கூட விரும்ப மாட்டான்.

கிளியை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் , முதல் வேலையாக தன்  வீட்டின் கதவுகளை அடைத்தான்.கிளியை கையில் எடுத்துக் கொண்டு வீட்டின் ஒரு மூலைக்குச் சென்றான்.

" இங்கே புதையல் இருக்கிறதா ? " என்றான்.

உடனே கிளியும் தனக்குத் தெரிந்த " அதிலென்ன சந்தேகம் ? " என்ற வார்த்தையை சொன்னது.

அவ்விடத்தை தோண்டியவன், அங்கே புதையல் இல்லாதது கண்டு அதிர்ச்சியுற்றான். ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு, வேறு இடத்தைக் காண்பித்து அவ்விடத்தில் புதையல் உள்ளதா என்றான்.

கிளி  வழக்கம் போல் "அதிலென்ன சந்தேகம் ? " என்றே சொன்னது. இப்படியே வீட்டின் பல இடங்களை தோண்டிப் பார்த்து ஒன்றும் கிடைக்கவில்லை. வீடே முழுதும் இடிக்கப் பட்டு விட்டது. எங்கும் புதையல் கிடைக்கவில்லை.

அப்போது தான் செங்கையனுக்கு கிளி இவ்விரு வார்த்தைகளை மட்டும் தான் கற்றுக் கொண்டுள்ளதோ என்று சந்தேகம் வந்தது.

ஆத்திரத்துடன் செங்கையன்  கிளியைப் பார்த்து, " கிளியே ! என் வாயில் மண்ணை அள்ளிப் போடவா நீ வந்து சேர்ந்தாய் ? " என்றான்.

உடனே கிளி சற்றும் யோசிக்காமல் " அதிலென்ன சந்தேகம் ? " என்றது.

தலையில் கைவைத்தவாறு  கீழே விழுந்தான் செங்கையன்.

Sunday, February 23, 2014

காற்றுள்ள போதே.....

தலையசைத்தாடி குதித்தோடியபடியே அந்த மேய்ச்சல் காட்டினை நோக்கி ஓடி  வந்தாள்  செண்பகம். வழியில் கம்பீரமாய் வீற்றிருந்த ஆலமரத்தின் மடிதனில் அமர்ந்து கொண்டு, சர்வ அலங்காரத்துடன், கருணை பொழியும் முகத்துடன், வரங்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தார் பிள்ளையார். அவரைக் கண்டதும் சடாரென நின்று,

" என்ன புள்ளையாரப்பனே ! இன்னைக்கு பூசையெல்லாம் முடிஞ்சு, சாப்டுட்டு ஜம்முனு உக்காந்துட்டு இருக்கீங்க போல ! இந்த சந்தோசத்தோட, நாட்ல மக்க பஞ்சத்தை  எல்லாம் தீத்து, நல்லபடியா வாழ வையப்பா சாமீ ! " என்று இறைவனிடம் மனு போட்டுவிட்டு ,  தன்   அலுவலை  கவனிக்கச்  சென்றாள்  செண்பகம்.

செண்பகம் பள்ளிப் படிப்பை முடித்து ஆறு மாத காலம் ஆகி இருந்தது. மேற்படிப்பு படிக்க அவளுக்கு ஆசை அதிகம். ஆனால், குடும்ப நிலைமை எண்ணி அவளது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டிருந்தனர் அவளது பெற்றோர். செண்பகத்துக்கு ஒரு தம்பியும், தங்கையும் இருந்தனர். தனது படிப்பு தான் தடைபட்டுப் போயிற்று. எக்காரணத்தைக் கொண்டும் தன்  தம்பி தங்கையின் படிப்பு நின்று போய் விடக் கூடாது. அவர்களை பட்டதாரிகளாக்கிப்  பார்த்து விட வேண்டும் என்று வைராக்கியத்துடன் இருந்தாள்  செண்பகம்.  

ஒருநாள்  மாலை வேளையில், மேய்ச்சல் காட்டிலிருந்து கால்நடைகளை பட்டியிலடைத்து விட்டு, சோர்வாக தூக்குச் சட்டியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அப்போது, அந்த விளம்பர சுவரொட்டி அவளது கண்களில் பட்டது.

"வேலைக்கு ஆட்கள் தேவை ! " தமிழகத்தின்  பல்வேறு பெருநகரங்களில்  துவங்கப்பட இருக்கும் பல்பொருள் அங்காடிகளில் பணிபுரிய ஆட்கள் தேவை. பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்த ஆண் - பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்" என்றிருந்த  விளம்பரப் பலகையைக் கண்டதும் செண்பகத்தின் மனதில் மின்னலடித்தது.

இந்த வேலையில்  சேர்ந்து விட்டால், எப்படியும் குறைந்தது ஓர் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரை சம்பளம் கிடைக்கும், அதை மாதாமாதம் சேமித்து வைத்தால், தம்பி தங்கைகளின் படிப்புக்கு பேருதவியாக இருக்கும். நாம் நினைத்தபடி  அவர்களை நன்முறையில் படிக்க வைத்து நல்ல நிலைமைக்கு கொண்டுவந்து விடலாம்" என்று செண்பகத்தின் மனதில் எண்ண அலைகள் கரைபுரண்டு ஓடின.  

வீட்டை அடைந்ததும், தன்  பெற்றோரிடம் தனது எண்ணத்தினை வெளியிட்டாள் செண்பகம். முதலில், பெண்பிள்ளையை  எப்படி வெளியூருக்கு தனியே வேலைக்கு அனுப்புவது என்று தயங்கினர். ஆனால், அங்கு குடும்ப கஷ்டமே ஜெயித்தது. குடும்ப நலனை உத்தேசித்து, செண்பகம் வேலைக்குச்  செல்ல சம்மதம் அளித்தனர்.

அடுத்த நாள்,  தன்  தோழி  காமாட்சியை சந்தித்த செண்பகம், தான் வேலைக்குச் செல்லவிருக்கும் விபரங்களை தெரிவித்தாள். " அந்த  வேலை ரொம்ப கஷ்டமா இருக்கும்னு  கேள்விப்பட்டிருக்கேன் செம்பகம். காலைல எட்டு மணில  இருந்து இராத்திரி எட்டு மணி வரைக்கும் வேலை இருக்குமாம் புள்ள. நின்னுக்கிட்டே தான் இருக்கனுமாம்.உடம்புக்கு முடியலன்னா கூட லீவு போட முடியாதாம். லீவு போட்டா சம்பளத்துல புடிச்சிடுவாங்களாம் . ஊருக்கும் நினைச்சப்ப எல்லாம் வர முடியாதாம் " என்றெல்லாம் காமாட்சி சொல்லச் சொல்ல, செண்பகத்துக்கு  மனதுள் மெல்ல மிரட்சி எட்டிப் பார்த்தாலும், தன்  குடும்ப நலன் என்ற வைராக்கியமே மேலோங்கி இருந்தது. வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டுமென்று தீர்க்கமான முடிவெடுத்து அதை செயல்படுத்தவும்  ஆயத்தமானாள்.

 செண்பகம் வேலைக்குச் சேர்ந்து ஒருமாத காலம் ஆகி இருந்தது. புது இடம், புது மனிதர்கள், புது வேலை என்று செண்பகத்திற்கு  சற்று  கஷ்டமாக இருந்தாலும், ஒருவாறு சமாளித்துக் கொண்டாள். அங்கு அவளுக்கு வேணி என்றொரு புதிய தோழி  கிடைத்தாள். செண்பகத்திற்கும் வேணிக்கும்  புடவைகள் விற்பனைப் பிரிவில் வேலை. கண்கவர் வண்ணங்களில் அழகழகாய் ஜொலிக்கும் புடவைகளைக் கண்டதும் செண்பகத்துக்கு தங்கையின் நினைவு வந்தது. விடுமுறையில் ஊருக்குச்  செல்லும் போது  தங்கைக்கு புடவை வாங்கிச் செல்ல வேண்டுமென்று மனதுள் முடிவெடுத்துக் கொண்டாள். 

வரும் வாடிக்கையாளர்களுக்கு  புடவைகளை எடுத்து விரித்துக் காண்பித்து , அவர்களது முக பாவனைகட்கு ஏற்ப, அவர்களது விருப்பு வெறுப்பு உணர்ந்து,  வியாபாரத்தை கவனிக்கும் வழிவகைகளை வேணி  செண்பகத்துக்கு சொல்லிக் கொடுத்தாள். ஒரு மாத கால பழக்கத்தில், வியாபார உத்திகள் கற்றுக் கொண்டாள்  செண்பகம். 

முதல் மாத சம்பளம் வந்தது. அவள் பணிபுரியும் நிறுவனமே தங்க இடமும், உணவும் அளித்திருந்ததால், சம்பளத்தை அப்படியே தன் பெற்றோருக்கு முழுவதுமாக அனுப்பிவிட எண்ணினாள். கூடவே, தங்கைக்கு ஒரு புடவையும், தம்பிக்கு சட்டை தைக்க புதுத் துணியும் எடுத்து அனுப்பினாள்.

அனாவசியமாய் செலவுகள் எதுவும் செய்யாமல், கிடைக்கும் சம்பளத்தை வங்கியில் கணக்கு தொடங்கி சேமித்து வந்தாள். உடன் பணிபுரியும் பெண்கள் விடுமுறை கிடைக்கும் போது சினிமாவிற்கு செல்லலாம் என்றோ, புதிதாய் ஏதேனும் பொருள் வாங்கலாம் என்றோ சொன்னால், மறுத்து விடுவாள். இதனால், பலரும் இவளை கிண்டல் செய்வர். சரியான கஞ்சப் பேர்வழி  என்றும்,  வாழ்வை அனுபவிக்கத் தெரியாதவள் என்றும் கிண்டல் செய்வர். அந்த மாதிரியான பேச்சுகளை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டாள்  செண்பகம். 

அந்த வர்த்தக நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் சுயமுன்னேற்றத்திற்காக கணினி, தட்டச்சு போன்ற பாட வகுப்புகள் நிறுவனத்தாராலேயே நடத்தப் பட்டன. விருப்பமுள்ளவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தனர்.  அந்த அறிவிப்பைக் கேட்டதும், தானும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் செண்பகத்துக்கு ஏற்பட்டது. 

வகுப்புகள் ஆரம்பமாயின. அங்கு பணிபுரியும் ஒரு பெண்,  "  என்ன செண்பகம் , இப்போ  நாம இத கத்துக்கிட்டா, உடனே நமக்கு கம்ப்யூட்டர்ல  பாக்குற மாதிரி சுளுவான வேலையாவா குடுத்துறப் போறாங்க ?  அன்னன்னைக்கு வேலையைப் பாத்தோமா, சம்பளத்த வாங்குனோமா, லீவ் கிடச்சா ஜாலியா எங்கயாவது போயிட்டு வந்தோமான்னு இல்லாம, லீவ் அன்னைக்கும் கிளாஸ்க்கு போகணும். நமக்கு ஏற்கனவே கஷ்டமான வேலை, இதுல இன்னும் படிச்சு வேற கஷ்டப் படணுமா ? என்றாள்.

 " படிச்சு வெச்சுக்கிட்டா, இன்னைக்கு இல்லாட்டியும், என்னைக்காவது ஒருநாள் நமக்கு ரொம்ப உபயோகமா இருக்கும் அக்கா "  என்றாள் செண்பகம்.  ஆரம்பத்தில், சற்று கஷ்டமாக இருந்தாலும், நம்பிக்கை தளராது, முயற்சித்து,  நன்றாக படித்துத்  தேறினாள். 


ஒரு நாள் , கணினியில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. ஆனால், கணினி இயக்குபவர் வராததால், கணிப்பொறி பயன்பாடு தெரிந்தவர் எவரேனும் தட்டச்சு செய்து, படி எடுத்துத் தரும்படி கண்காணிப்பாளர்  கேட்டார். எல்லோரும்  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க, செண்பகம் மெல்ல , "சார், நான் செய்யறேன்" என்றாள். "உனக்கு தெரியுமா? " என்று அவர் கேட்க, "தெரியும் சார்." என்றவள், கணினியின் அருகில் சென்றாள். அவளுள் ஏனோ  ஓர்  இனம் புரியா பயம். ஒருவாறு சமாளித்துக் கொண்டு, கண்காணிப்பாளர்  கேட்டதை செய்து கொடுத்தாள்.


"ஓ ! நீ இதெல்லாம் கூட நல்லா கத்து வெச்சிருக்கியே செண்பகம். பரவாயில்லையே ! நாளைக்கே உனக்கு கம்ப்யூட்டர் செக்க்ஷன்ல வேலையை மாத்திப் போடச் சொல்றேன் " என்று கூறிவிட்டு அவசரமாக சென்றுவிட்டார் கண்காணிப்பாளர். அடுத்தநாளே, கண்காணிப்பாளர் கூறியபடி, அவரது சிபாரிசின் பேரில், செண்பகத்துக்கு கணிப்பொறி பிரிவில் வேலையை மாற்றித் தந்தனர். அவளது சம்பளமும் உயர்த்தப்பட்டது.


சில நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்குப் போய்வர எண்ணினாள் செண்பகம். தனது மேலாளரிடம் விடுப்புக்கு அனுமதி பெற்றுக் கொண்டு, தனது பெற்றோருக்கு தான் ஊருக்கு வரும் விபரத்தையும் தெரியப் படுத்தினாள். அவள்  விடுமுறையில் ஊருக்கு வரும் நாளுக்காக, குடும்பத்தினர் அனைவரும் ஆவலுடன்  எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.


தெய்வத்திடம்  வரம் வேண்டி படையல்கள் படைத்து, காத்து நிற்கும் பக்தர்கள் மத்தியில், தெய்வத்தின் நலம் விசாரிக்கும் பக்தையான  செண்பகத்திற்காக   அந்த ஆனைமுகக் கடவுளும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்.காதல் வங்கி- சிறுகதை விமர்சனம்

காதல் வங்கி '


சிறுகதைBy வை. கோபாலகிருஷ்ணன்-oOo- ஜானகி அந்தப்பிரபல வங்கியின் காசாளர். பணம் கட்டவோ வாங்கவோ அங்கு பல கெளண்டர்கள் இருப்பினும், வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் விரும்புவது ஜானகியின் சேவையை மட்டும்தான்.  மிகவும் அழகான இளம் வயதுப்பெண் என்பதால் மட்டுமல்ல. தேனீ போன்ற சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பாதவள். தன் சேவையை நாடி வரும் அனைவருக்குமே சிரித்த முகத்துடன், சிறப்பான ஒரு வித வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பும், வரவேற்பும் அளிப்பவள். அனைவருடனும் மிகுந்த வாத்ஸல்யத்துடன் பழகுபவள்.அடடா ! ........... இவள் எவ்வளவு கட்டிச் சமத்தாக இருக்கிறாள் ! தங்களுக்கு இதுபோன்ற தன்மையான, மென்மையான, அமைதியான, புத்திசாலியான, அழகான, பழகிட நல்ல கலகலப்பான பெண் ஒருத்தி பிறக்கவில்லையே என்றும் அல்லது மருமகள் ஒருத்தி அமையவில்லையே என்றும் ஏங்குவார்கள் அங்கு வரும், சற்றே வயதான வாடிக்கையாளர்கள்.கெளண்டருக்கு வரும் இளம் வயது வாலிபர்களைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். யாரைப் பார்த்தாலும், இளைஞர்களின் கற்பனையே ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.மொத்தத்தில் வங்கிக்கு வரும் அனைவரையுமே, ஏதோ ஒரு விதத்தில், மகுடிக்கு மயங்கும் நாகம் போல, வசீகரிக்கும் அல்லது சுண்டியிழுக்கும் தனித்தன்மை வாய்ந்தவள் தான் அந்த ஜானகி.இப்போது ரகுராமனும் அந்த வங்கியில் ஒரு வாடிக்கையாளர் தான். வங்கியின் சேவைகள், செயல்பாடுகள் பற்றியெல்லாம் எதுவும் அறியாமல் இருந்த ஆசாமி தான், ரகுராமன்.மற்ற குழந்தைகள் போல பள்ளியில் சேர்ந்து படித்தவர் அல்ல ரகுராமன்.அவரைப்பொருத்தவரை வங்கி என்றால் ஜானகிஜானகி என்றால் வங்கி. வேறு எதுவும் வங்கியைப்பற்றித் தெரியாதவர். 
எல்லோருக்கும் எல்லாவற்றையும் பற்றி தெரிய வேண்டும் என்ற நியாயமோ அவசியமோ இல்லையே !


ரகுராமனுக்கு சிறு வயதிலேயே பூணூல் போடப்பட்டு, அழகாக சிகை (குடுமி) வைக்கப்பட்டு, வேதம் படிக்க வேண்டி திருவிடைமருதூர் பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர் அவரது பெற்றோர்கள். பரம்பரையாக வேத அத்யயனம் செய்து வரும் வைதீகக் குடும்பம் அது.ரகுராமனும் வெகு சிரத்தையாக குருகுலமாகிய வேத பாடசாலையில் வேதம், சாஸ்திரம், சம்ஸ்கிருதம், கிரந்தம் முதலியன நன்கு பயின்று முடித்தவர். அது தவிர ஓரளவுக்கு கணித பாடமும், பேச படிக்க எழுதக்கூடிய அளவுக்கு தமிழும் ஆங்கிலமும் கற்றுத்தேர்ந்தவர் தான். வேத சாஸ்திரங்களில் கரை கண்ட அளவுக்கு, லோக விஷயங்களில் அவருக்கு அதிக ஆர்வமோ ருசியோ இல்லை தான்.இருப்பினும் தான் படித்த வேத சாஸ்திரங்களை அனுசரித்து, நம் முன்னோர்கள் வாழ்ந்த, ஆச்சாரமான எளிமையான வாழ்க்கை வாழ்ந்தால், தற்சமயம் கலியுகத்தில் ஜனங்கள் பட்டு வரும், பல்வேறு சிரமங்களுக்கும், கஷ்டங்களுக்கும் ஒரு வடிகாலாக அமையும் என்பதால், தான் செல்லும் இடங்களிலெல்லாம், சந்திக்கும் மக்களுக்கெல்லாம், வேத சாஸ்திர வழிமுறைகளையும், அவற்றை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும், தனக்கே உரித்தான அழகிய பிரவசனங்கள் [ஆன்மீகச் சொற்பொழிவுகள்] மூலம் மக்கள் மனதில் நன்கு பதிய வைத்து வந்தார்.


ஜானகி வீட்டில் நடைபெற்ற ஏதோவொரு சுப வைபவத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டவர் தான் இந்த ரகுராமன். 
ரகுராமன் அவர்களை முதன் முதலாகச் சந்தித்த ஜானகி, அவரின் அழகிற்கும், முகத்தில் தோன்றும் பிரும்ம தேஜஸுக்கும்,  அறிவு வாய்ந்த அவரின் பாண்டித்யத்திற்கும், நல்ல விஷயங்களை, நல்ல விதமாக, நன்கு மனதில் பதியுமாறு எடுத்துச்சொல்லும் நாவன்மைக்கும், லோகம் முழுவதும் உள்ள மனித சமுதாயம் மட்டுமின்றி, சகல ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற அவரின் பிரார்த்தனைகளுக்கும், வியந்து போய் தன் மனதையே அவரிடம் பறிகொடுத்து விட்டாள்.அவருடன் தனக்கு ஏதாவது ஒரு தொடர்பு ஏற்பட வேண்டுமே என சிந்திக்கலானாள்.  தன் வீட்டு விழாவுக்கு வந்திருந்த பலரும், ரகுராமன் அவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதைப் பார்த்தாள் ஜானகிநேராகச் சென்று தானும் அவர் கால்களில் விழுந்து கும்பிட்டு வணங்கி எழுந்தாள், ஜானகி. தான் ஒரு வங்கியில் பணிபுரிவதாகச் சொன்ன ஜானகி, ”உங்களுக்கு எந்த வங்கியில் வரவு செலவு கணக்கு உள்ளது” என்றும் வினவினாள்.வில்லை முறித்த ஸ்ரீ இராமபிரான் முதன் முதலாக வெற்றிப் புன்னகையுடன் ஸீதாதேவியை நோக்கிய அதே பரவசத்துடன், தன்னை விழுந்து வணங்கிய ஜானகியின் அழகிலும், அடக்கத்திலும், இனிய குரலிலும் மயங்கி, தன்னை மீறி தன் உடம்பில் ஒருவித மின்சாரம் பாய்வதை உணந்தார், நம் ரகுராமன்.

   

இருவர் உள்ளத்திலும் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏதோ ஒருவித காந்தம் போன்ற கவர்ச்சியும், காதலும் கசிந்துருக ஆரம்பித்திருந்தது.உண்மையிலேயே காதல் என்பது மிகவும் விசித்திரமானது. அதன் இலக்கண இலக்கியங்களை யாருமே நிர்ணயித்து விட முடியாது. காதல் எங்கே, எப்படி, யாருக்கு, யார் மீது எப்போது எதற்காக ஏன் ஏற்படும் என்று யாராலும் சரிவர கணித்துச் சொல்ல முடியாது. திடீரென இப்படிப் பார்த்த மாத்திரத்திலேயே ஒருவருக்கொருவர் பரவசம் ஏற்படுத்துவதே உண்மையான காதலாகுமோ என்னவோ !அன்றே, அப்போதே, அங்கேயே ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது.  புதிய வங்கிக் கணக்கைத் தொடங்க ஜானகியே எல்லா உதவிகளையும் வேக வேகமாகச் செய்து உதவினாள்.
அன்று இரவே, ஜானகியின் அம்மா, தன் மகளின் மனதில் பூத்துள்ள புதுப்புஷ்பத்தின் சுகந்தத்தை அறிந்து கொண்டு, உண்மையிலேயே தன் மனதுக்குள் மகிழ்ந்து கொண்டாலும், அவளை சற்றே சீண்டிப்பார்த்தாள்.
“ஜானகி, நல்லா யோசனை செய்து பார்த்து நீ எடுத்த முடிவா இது?” என்றாள்.
“இதில் யோசிக்க என்ன இருக்கிறது?” என்றாள் ஜானகி.
“இல்லை, நீ நிறைய படிச்ச பொண்ணு, வேலைக்கும் போகிறாய், கை நிறைய சம்பாதிக்கிறாய். நவ நாகரீகமாக வாழ்க்கைப்பட்டு ஜாலியாக உன் இஷ்டப்படி இருக்க ஆசைப்படலாம்; 
இவரோ வேதம், சாஸ்திரம், புராணம்,  ஆச்சாரம், அனுஷ்டானம், அது இதுன்னு யாருக்குமே லேசில் புரியாத விஷயங்களை, பழைய பஞ்சாங்கம் போல பிரச்சாரம் செய்பவராக இருக்கிறார் ...... அதனால் கேட்டேன்” என்று லேசாக ஊதிவிட்டாள்.

“நான் படிச்ச படிப்பெல்லாம் ஒரு படிப்பா அம்மா? ஏதோ சும்மாதானே வீட்டில் இருக்கிறோம்ன்னு ஒரு பொழுதுபோக்குக்காக இந்த வேலையை ஒத்துக் கொண்டேன். கை நிறைய சம்பளம் யார் தான் இன்று வாங்கவில்லை? நவ நாகரீக வாழ்க்கை என்பதெல்லாம் எத்தனை நாளைக்கு அம்மா வாழமுடியும்? எதுவுமே கொஞ்ச நாளில் சலிப்பு ஏற்படுத்தித்தானே விடும்!; 


அதுவும் கல்யாணம் என்ற ஒன்று ஒருவருடன் எனக்கு ஆகிவிட்டால், என் இஷ்டப்படி எப்படி என்னால் வாழமுடியும்? 
இப்போ உன்னையே எடுத்துக்கொள்ளேன், நீ உன் இஷ்டப்படியா வாழ முடிகிறது அல்லது ஏதாவது முக்கிய முடிவுகளாவது உன் இஷடப்படித்தான் எடுக்க முடிகிறதா? எல்லாமே அப்பா இஷ்டப்படித்தானே நடக்கிறது ! நீயும் அதைத்தானே மகிழ்வுடன் எப்போதும் ஏற்றுக்கொண்டு வருகிறாய்; அதுபோல நானும் இருந்துவிட்டுப்போகிறேனே !! ;
உனக்கு மாப்பிள்ளையா வரப்போகும் இவர் தான் அம்மா, உண்மையில் மனுஷ்யனாகப் பிறந்தவன் என்ன படிக்கணுமோ அதையெல்லாம் படித்துள்ளார்; எவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளணுமோ, அவற்றையெல்லாம் தெரிந்து வைத்துள்ளார்;  
நம் தாத்தா பாட்டி, ஏன் நம் பரம்பரையே ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து, நித்யப்படி பூஜை புனஷ்காரங்கள் செய்து ஆனந்தமாக வாழ்ந்தவர்கள் தானே! அதனால் தானே நாம இன்னிக்கு சந்தோஷமா செளக்யமா இருக்க முடிகிறது?” என்றாள் ஜானகி.
தன் பெண்ணின் தீர்க்கமான முடிவை எண்ணி வியந்த அவளின் தாயார் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்று விட்டிருந்தாலும், அவளை மேற்கொண்டு சீண்டுவதிலும் சற்றே ஆசைப்பட்டாள். 
அருமை மகளும் ஆருயிர்த்தோழியும் ஒன்றல்லவா ! இதுவரை தாயாக இருந்து பேசியவள் இப்போது தோழியாக மாறிப் பேசலானாள்:
”உன் ஆத்துக்காரர் பேண்ட், சட்டை கோட்டு சூட்டுப் போட்டு டைகட்டி டிப்-டாப்பாக உனக்கு இருக்க வேண்டாமா? கட்டுக்குடுமியுடன், கல்யாணம் ஆனதும் பஞ்சக்கச்சம் கட்டிண்டு, காதிலே கடுக்கண்கள் போட்டுண்டு இருந்தால் நோக்குப்பரவாயில்லையா ? “ என்றாள்.
“அம்மா, இந்த டிப்-டாப் ஆசாமிகளைப் பற்றியெல்லாம் நோக்குத்தெரியாதும்மா. கோட்டுச் சூட்டுப்போட்டு வெளியிலே டை கட்டியவன் எல்லாம் உள்ளுக்குள்ளே வேறொருவனுக்கு கைகட்டித்தான் வேலைப்பார்க்கணும்; 
அதிலும் பாதிபேர் குடிச்சுட்டு வராங்க, தம்மடிக்கிறாங்க, ஊரெல்லாம் கடன் வாங்கறாங்க, ஆபீஸுலே எல்லா லோனும் போடுறாங்க, எதை எதையோ தேவையில்லாததை எல்லாம் தேடி அலையறாங்க. கெட்டபழக்கம் ஒண்ணு பாக்கியில்லாம பழகிக்கிறாங்க;
எந்தவொரு ஆச்சார அனுஷ்டானமும் இல்லாமல் கண்ட எடத்துல கண்டதையும் திங்கறாங்க. கடைசியிலே ஆரம்பத்திலே இருக்குற நிம்மதியைப்பறி கொடுத்துட்டு, நடைபிணமாத் திரியறாங்க! 
இலவச இணைப்பா வியாதியை சம்பாதித்து வந்து பெண்டாட்டி, பிள்ளைகளுக்கும் பரப்பிடறாங்க. உலகத்துல இன்னிக்கு என்னென்ன அநியாயங்கள் நடக்குதுன்னு நாட்டு நடப்பே தெரியாம, நீ ஒரு அப்பாவியா இங்கே இருக்கே;
உனக்கு மாப்பிள்ளையா வரப்போற பத்தரை மாத்துத் தங்கத்தையும், கவரிங் நகைபோன்று நாளடைவில் பளபளப்பிழந்து பல்லைக்காட்டக்கூடிய, இந்தப் படாடோபப் பேர்வழிகளான டிப்-டாப் ஆசாமிகளையும், நீ ஒப்பிட்டுப்பேசறதே எனக்குப்பிடிக்கலை; 
வேத சாஸ்திரங்கள் படித்தவர்கள் எப்போதுமே தவறான குறுக்கு வழிகளுக்குப் போகவே தயங்குவாங்க! அவங்க மனசாட்சி அதுபோல தப்பெல்லாம் செய்ய ஒரு நாளும் அவர்களை அனுமதிக்காது; 
குடுமி என்னம்மா குடுமி !  ”வெச்சா குடுமி--சரச்சா மொட்டை” ன்னு, அப்பாவும் நீயும் தான் பழமொழி சொல்லுவீங்களே! 
அந்தக்ககாலத்துல நம் முன்னோர்களெல்லாம் இதே குடுமிதானே வெச்சிண்டிருந்தா, இப்போ நாகரீகம் பேஷன்னு அடிக்கடி தலை முடியை மட்டும் மாத்திக்கிறா; 
பொம்மனாட்டிகளும் மாறிண்டே வரா; பாவாடை சட்டை தாவணியெல்லாம் போய், மிடி, நைட்டி, சுடிதார், ஜீன்ஸ் பேண்ட், டீ-ஷர்ட்டுனு ஏதேதோ போட ஆரம்பிச்சுட்டா.சுதந்திரம் வேணும்னு சிலபேர் காத்தாட சுதந்திரமாவே உடை அணிய ஆரம்பிசுட்டா. ஆம்பளைகள் மாதிரி தலையையும் பாப் கட்டிங் பண்ணிக்க ஆரம்பிச்சுட்டா; 

ஆம்பளைகளும் அடியோட பொம்மனாட்டி மாதிரி மாறிண்டே வரா; ஸ்கூட்டர் பைக் ஓட்டிப்போவது ஆம்பளையா, பொம்பளையான்னே இப்போ டக்குன்னு கண்டு பிடிக்க முடியலே!;
அதுவும் லேட்டஸ்ட் பேஷன் படி இந்தக்கால பையன்களெல்லாம் பொம்மணாட்டியாட்டம் தலைமுடியை வளர்த்து, அள்ளி முடிஞ்சு ரப்பர் பேண்ட் போட்டுக்க ஆரம்பிச்சாச்சு, காதுலேயும் தோடு போல, கம்மல் போல ஏதேதோ வளையம் போட ஆரம்பிச்சுட்டா. 

பழங்கால வழக்கப்படி ஒரு நாள் குடுமியே திரும்ப பேஷன்னு வந்தாலும் வந்துடும், பேஷன்னெல்லாம் எதுவுமே நிரந்தரமானது இல்லையேம்மா;
பேஷன் அடிக்கடி மாறும்மா; ஆனா உனக்கு மாப்பிள்ளையா வரப்போறவர் எப்போதுமே மாறாம அப்படியே நம் சாஸ்திர சம்ப்ரதாயப்படி நல்லவிதமாக நடந்துகொண்டு, அந்த ஸ்ரீராமாயணத்தில் வரும் ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி மாதிரி “ஒரு சொல்” “ஒரு வில்” “ஒரு இல்” என்று ஏகபத்னி விரதனாத்தானம்மா இருப்பார். அது தானேம்மா நமக்கு ரொம்பவும் முக்கியம்” என்று பெரிய பிரசங்கமே செய்ய ஆரம்பித்து விட்டாள், ஜானகி.
ஜானகியின் கன்னங்கள் இரண்டையும் தன் இருகைகளாலும் வழித்து, தன் தலையில் விரல்களை வைத்து சொடுக்கியபடி, அவளின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாள், ஜானகியின் தாயார். 
”எப்படிடீ உனக்கு அவர் இப்படி ஒரு சொக்குப்பொடி போட்டார்?” என்றாள் மேலும் கொஞ்சம் அவளின் அழகான பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்டு மகிழ.
”அம்மா, அவர் சொற்பொழிவுகள் அடங்கிய CD ஒன்று தேடிப்பிடித்து இன்று தான் கடையில் வாங்கி வந்து கேட்டு மகிழ்ந்தேன். ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார், தெரியுமா!;
நாம் எவ்வளவோ பிறவி தாண்டித்தான் இந்த மகத்துவம் வாய்ந்த மனுஷ்யப்பிறவியை அடைகிறோமாம். மனுஷ்யாளாப் பிறப்பதே அரிது என்கிறார்.   பிறவிப்பெருங்கடலைத் தாண்ட மனுஷ்ய ஜன்மா மட்டுமே சுலபமாக வழிவகுக்குமாம்; 

மனுஷ்யாளால் தான் பகவன் நாமாக்கள் சொல்லி வழிபட முடியுமாம். பகவன் நாமா ஒன்று தான் மோட்சத்திற்கு வழிவகுக்குமாம். 
எவ்வளவு அழகாக மனதில் பதியுமாறு மோட்சத்திற்கான வழிகளைச் சொல்கிறார் தெரியுமா! அவருடைய அபூர்வ விஷயஞானம் மட்டும் தானம்மா அவர் எனக்கு போட்ட ஒரே சொக்குப்பொடி” என்றாள் ஜானகி, தன் முகம் பூராவும் ஆயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போன்ற ஓர் பொலுவுடனும், பூரிப்புடனும்.
பருவ வயதில் தன் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு என்னவென்று பெற்ற தாயாருக்குப் புரியாதா என்ன? 
சிரித்தபடியே ஜானகியை அள்ளிப் பருகி, அவள் நெற்றியில் முத்தமிட்டு, தலையைக் கோதிக்கொடுத்து, அவளை அப்படியே கட்டியணைத்துத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டாள், ஜானகியின் தாயார்.

தினமும் அந்த வங்கியின் வாசலில் ரகுராமன் தனது காரில் வந்து இறங்குவதும், அவர் உள்ளே நுழையும் முன்பே, வந்துவிடும் செல்போன் தகவலால், வழிமேல் விழி வைத்து ஜானகி ஆவலுடன் ஓடிவந்து, அவரை வரவேற்பதும், வாடிக்கையான நிகழ்ச்சியாக இருந்து வந்தது.
ஒரு ஹேண்ட்பேக் நிறைய வழிய வழிய ரூபாய் நோட்டுக்களாகவும், சில்லறை நாணயங்களாகவும் ரகுராமன் ஜானகியிடம் தருவார். ஜானகி கையால் ஒரு டம்ளர் ஜில் வாட்டர் மட்டும் வாங்கி அருந்துவார். முதல் நாள் அவளிடம் பணத்துடன் ஒப்படைத்துச் சென்ற காலிசெய்யப்பட்ட ஹேண்ட்பேக்கை ஞாபகமாக திரும்ப வாங்கிச் செல்வார். 
இவ்வாறு இவர்களின் காதல் சந்திப்புக்களும், வங்கிக்கணக்கும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்தும் வளர்ந்தும் வந்தன.
ரகுராமனின் வங்கிக்கணக்கில் ஜானகியின் கைராசியால் இன்று பல லக்ஷங்கள் சேர்ந்து விட்டன. அவர்கள் இருவரின் ஆசைப்படி, வங்கிக்கணக்கில் ஒரு அரை கோடி ரூபாய் சேர்ந்த பிறகு, ஊரறிய சிறப்பாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுபோல அவர்கள் மனதுக்குள் ஓர் ஒப்பந்த நிச்சயதார்த்தம் ஏற்கனவே நடந்துள்ளது. அந்த அரைக்கோடி ரூபாய் சேமிப்பை எட்டப்போகும் நல்ல நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. 

வங்கியில் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் தவிர, வங்கிக்கு வந்து போகும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், கடந்த ஒரு மாதமாக ஜானகி தன் திருமண அழைப்பிதழ்களை, தன் வெட்கம் கலந்த புன்னகை முகத்துடன் விநியோகித்து வருகிறாள்.
இரு வீட்டாருக்கும் அறிந்த தெரிந்த சொந்தங்களும், நண்பர்களுமாக அனைவரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி மகிழ, ஜாம் ஜாம் என்று ரகுராமன் ஜானகியின் விவாஹம், சாஸ்திர சம்ப்ரதாய முறைப்படி, நான்கு நாட்கள், இரு வேளைகளும் ஒளபாஸன ஹோமங்களுடன், இனிதே நடைபெற்று முடிந்தது.
ரகுராமன் விருப்பப்படியே ஜானகி தொடர்ந்து தன் வங்கிப்பணிக்குச் சென்று வரலானாள்.
தன் கணவரின் வேத சாஸ்திர நம்பிக்கைக்கு ஏற்றபடி, தினமும் மடிசார் புடவையுடன், இரண்டு மூக்குகளிலும் வைர மூக்குத்திகள் ஜொலிக்க, காதுகள் இரண்டிலும் வைரத்தோடுகள் மின்ன, காலில் மெட்டிகள் அணிந்து, கைகள் இரண்டிலும் நிறைய தங்க வளையல்கள் அடுக்கிக்கொண்டு, தன் நீண்ட கூந்தலை ஒற்றைச்சடையாக குஞ்சலம் வைத்து பின்னிக்கொண்டு, உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பட்டுப்போல மருதாணி சிவக்க, முகத்திற்கு பசு மஞ்சள் பூசி, நெற்றியிலும், நடு வகிட்டிலும் குங்குமம இட்டுக்கொண்டு, தலை நிறைய புஷ்பங்கள் சூடி, வாயில் தாம்பூலம் தரித்து, கழுத்தில் புதிய மஞ்சள் கயிற்றுடன் திருமாங்கல்யம் தொங்க, கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன் போல காட்சியளித்த ஜானகி, வங்கியின் கேஷ் கெளண்டரில் எப்போதும் போல சுறுசுறுப்பாகப் பணியாற்றி வந்தாள்.
மிகவும் லக்ஷ்மிகரமாகத் தோற்றம் அளிப்பதாக ஒரு சிலர் வாய் விட்டுப் பாராட்டும் போது, கொடி மின்னலென ஒரு புன்னகையுடன் அதனை ஏற்றுக்கொள்வாள் ஜானகி.
அவள் கையால் கொடுக்கும் பணத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு, அந்த தனலக்ஷ்மி அம்பாளே நேரில் வந்து தந்ததாக நினைத்துக்கொண்டனர், அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள்.
வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் புதுமையாகத் தோன்றிய ஜானகியைப் பார்ப்பவர்களுக்கு, அது சற்றே அதிசயமாக இருப்பினும், அவளைக் கையெடுத்துக் கும்பிட்டுப் போகணும் என்ற நல்லெண்ணத்தையே ஏற்படுத்தியது.
நமது  பண்பையும் பாரம்பரியத்தையும் தன்  கதையின் முக்கிய கதாபத்திரங்களின் (ரகுராமன், ஜானகி )   வாயிலாக  நமக்கு  விளக்கிச் சொல்கிறார்  ஆசிரியர்.

ஜானகியின்  குணாதிசயங்கள் 


 • சுறுசுறுப்பானவள் 
 • நேரத்தின் மதிப்பை உணர்ந்தவள் 
 • சிரித்த முகம் 
 • அன்பாக  உபசரிக்கும் பண்பு 
 • மென்மையானவள் 
 • கலகலப்பானவள் 
 • புத்திசாலி 
ரகுராமனின்  குணாதிசயங்கள் 

 • எளிமையானவர் 
 • பிறர் துயர் கண்டு வருந்தி , அதிலிருந்து அவர்களை  மீட்டெடுக்கும்  உபாயம் தேடுபவர்.
 • நல்லறிவு 
 • அனைவரும் நலமாய் இருக்க வேண்டுமென்ற உயர்ந்த எண்ணம்  கொண்டவர்
 • உலக அனுபவம் அதிகமில்லாதவர் 


 ரகுராமன் - ஜானகி இருவருக்கும் இடையில் மலரும் காதலை, ஒரு மெல்லிய மலர் மலரும் நிகழ்வைப் போன்று சித்தரிக்கிறார். 

மொட்டு ஒன்று மலராகி நறுமணம் வீசத் துவங்கும் தருணம்  எதுவென்று நம்மால் துல்லியமாகச்  சொல்லி விட முடியுமா ? அது போல் தான் ஒருவரது மனதில் காதல் மலர்வதும். ஒருவர் மீது காதல் உணர்வு தோன்றுவதற்கு  காரண காரியம் எதுவுமே தேவையில்லை. கண்டதும் கட்டுண்டு  தன்னலம் மறந்து  பரவசம் தனை  வழங்கும்  உணர்வே  காதல். காரண  காரியத்துடன்  ஒருநாளும்  காதல்  பிறப்பதில்லை. அப்படி காரணத்துடன்  பிறக்கும்  உணர்வானது  காதலே இல்லை. 

அதே போல் தான்  இங்கும்  ஆசிரியர்   ரகுராமன் மீது  ஜானகிக்கும்,  ஜானகி  மீது  ரகுராமனுக்கும்  ஏற்பட்ட  கருத்தொருமித்த காதலை  அழகானதொரு உவமையின் வாயிலாக விவரிக்கின்றார்.  இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததை " ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது "  என்ற  அழகான உவமையின் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார்.


"   பழகப் பழக  பாலும் புளிக்கும் "    என்ற  பழமொழிக்கேற்ப,  ஒரு காலத்தில்  நாம்  விரும்பி  இலயித்துப் போய்க் கிடக்கும்  ஆடம்பரமும், அலங்காரமும், நவ நாகரீகமுமே , நாளடைவில்   நமக்கே  சலிப்பு தட்டிப் போய்  விடக் கூடும். ஒருவரது வெளித் தோற்றம் மற்றும் அவரது ஆடை அலங்காரத்திற்கும் , அவர்களது சிந்தனைகட்கும்  பழக்க  வழக்கங்கட்கும்  எவ்வித சம்மந்தமும் இல்லை. ஒருவரது சிந்தனையே செயல்களாகின்றன. அந்தச் செயல்களே ஒரு மனிதனை நல்லவனாகவும் கெட்டவனாகவும்  உலகிற்கு அடையாளம் காட்டுகின்றன . 


" அரிது அரிது  மானிடராய்ப்  பிறத்தல்  அரிது "     என்ற  ஔவைப்  பிராட்டியின்   வாக்கிற்கேற்ப,  மானுடப்  பிறவியின்  சிறப்பையும்  பெருமையையும், பிறவிப் பெருங்கடலை  நீந்திக் கடப்பதற்கான உபாயத்தையும்   ரகுராமனின் ஆன்மீக  சொற்பொழிவின்  வாயிலாக  விளக்கிச் சொல்கிறார். 


இன்றைய  நாகரிகம்  மனிதர்களிடையே  ஏற்படுத்தியுள்ள  மாற்றங்கள் 
 1. குடிப்பழக்கம்  , புகை பிடித்தல் - ஆண்   பெண்  பாகுபாடு  இல்லாமல்  உயிர்கொல்லிக்  கிருமியென   மனித இனத்தை தாக்கிக் கொண்டிருக்கிறது.  
 2. நாகரிகத்தின் பெயரில்  பெண்கள் ஆண்களைப் போல  உடை உடுத்துதல், சிகை அலங்காரம் செய்து கொள்ளுதல் 
 3. நாகரிகம் வளர வளர,  உடைகள்   சுருங்கிக் கொண்டே  இருத்தல்
 4. ஆண்கள்  பெண்களைப் போல  சிகை வளர்த்துக் கொள்ளுதல்,  கடுக்கன் என்று பெண்களைப் போல காதில்  கம்மல் மாட்டிக் கொள்ளுதல் 
 5. காலங்காலமாய்  கடைபிடிக்கப் பட்டு வந்த  சாஸ்திரங்களும்  சம்பிரதாயங்களும்  ஒருசிலரால்  கடமைக்காக  கடைபிடிக்கப்படுகிறது. பலரோ,  அவற்றையெல்லாம்  சுத்தமாக  மறந்தே  போய்  விட்டனர்.


நாளொரு மேனியும்  பொழுதொரு வண்ணமுமாய்   அவர்களது   உறவு  சிறு  கிள்ளையைப்   போல்  புதுப் பொலிவுடன்,    எழில்  மேலிட ,  அழகாய்  வளர்ந்து  வந்தது  என்றும்,    காதல்  அவர்களிடையேயான  உறவினை   மென்மேலும்   உறுதிப் படுத்தியது என்றும் அழகாய் சொல்கிறார் ஆசிரியர்.


உவமைகள் 


 1. ஜானகியின்  காதல் - அன்றலர்ந்த புது   புஷ்பம் 
 2. ஜானகி - ரகுராமனின் உறவு  -  ரகுராமனின் புதுக்கணக்கு ஒன்று ஜானகியிடம் தொடங்கப்பட்டு விட்டது.
 3. தாயின்  காதலுக்கான ஒப்புதல்  -  ஜானகியின் கன்னங்கள் இரண்டையும் தன் இருகைகளாலும் வழித்து, தன் தலையில் விரல்களை வைத்து சொடுக்கியபடி, அவளின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாள், ஜானகியின் தாயார்.  
 4. ஜானகியின் அழகைப் பற்றிய வர்ணனை - கோயிலிலிருந்து புறப்பட்ட அம்மன், தனலட்சுமி  அம்பாள் 
 5. ஜானகியின்  புன்னகை  - கொடி மின்னல் 
 ஒரு  பெண்ணிற்கான  அழகான  ஆரோக்கியமான அலங்காரங்கள்  என்று  ஆசிரியர்  குறிப்பிடுபவை 

 1. புடவை 
 2. நகைகள் 
 3. மெட்டி 
 4. வளையல்கள் 
 5. நீண்ட கூந்தல் 
 6. மருதாணி 
 7. மஞ்சள் 
 8. குங்குமம் 
 9. மலர்கள் 
 10.  மாங்கல்யம் 
 ஒரு  மனிதனுக்கு  உண்மையான  அழகென்பது , அவர்கள் செய்து கொள்ளும்  அலங்காரத்தினாலோ , அல்லது  பகட்டான  ஆடை ஆபரணங்களினாலோ  கிடைப்பது அல்ல. தூய்மையான  உள்ளமும், அன்பும் , உயர்பண்புமே  உண்மையான  அழகு.

குணநலஞ்  சான்றோர்  நலனே  பிறநலம் 
எந்நலத்  துள்ளதூஉ  மன்று .
                                                            - குறள்  982
 
 பொருள்:
நற்பண்பு ஒன்றே சான்றோர்க்கான அழகாகும். வேறு எந்த அழகும் அழகல்ல.
   
இந்த உண்மையை தனது  காதல் வங்கி சிறுகதையின் வாயிலாக  அழகாக விளக்கிச் சொல்கிறார் ஆசிரியர்.
நல்லதொரு வாய்ப்பளித்த திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கட்கு என்  மனமார்ந்த நன்றிகள்.