blank'/> muhilneel: சேரிடம் அறிந்து சேர்

Tuesday, October 22, 2013

சேரிடம் அறிந்து சேர்

நட்பு !
இங்கு உதிர சம்மந்த 
உறவுகள் இல்லை !!
இதயத்தையே நண்பனின் 
உறைவிடமாக்கி  காலங்காலமாய் 
உவகையோடு சுமக்கும் 
உன்னத உள்ளங்கள் !!!

நட்பை என்றுமே உயர்வாக எண்ணுபவள் கலைவாணி.யார் எந்த உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வாள் . இளங்கலை பட்டப் படிப்பை  முடித்திருந்த அவள், மேற்படிப்பிற்காக புதிய கல்லூரியில் சேர்ந்திருந்தாள். அவளது வகுப்பில் பாதிக்கும் மேற்பட்ட மாணவியர் ஏற்கனவே, அதே கல்லூரியில் இளங்கலை வகுப்பில் ஒன்றாகப்  படித்தவர்கள். புதிய நண்பர்கள், புதிய சூழல் அனைத்தையும் பழக, கலைவாணிக்கு சிறிது காலம் ஆயிற்று.


அன்றாடம் கல்லூரிக்கு தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செல்வாள். சில சமயங்களில், தந்தைக்கு ஏதேனும் அலுவல்கள் இருப்பின், கல்லூரிக்கு நடந்தே சென்று விடுவாள். அப்படி ஒருநாள் நடந்து செல்லும் போது தான், வகுப்பில் உடன் பயிலும் மாணவி சந்திரா இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாள். கலைவாணியைக் கண்டதும், வண்டியை நிறுத்தி அவளையும் ஏற்றிக் கொண்டாள். அவ்வப்போது நடந்து செல்லும் போதெல்லாம், சந்திரா, கலைவாணியை தன்னுடன் அழைத்துச் செல்வாள்.


ஒருநாள் சந்திரா, இனிமேல் தானே கலைவாணியை  வீட்டில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி, அன்றாடம் கலைவாணியை அழைத்துச் சென்று, கல்லூரி முடிந்ததும் வீட்டில் கொண்டுவந்து விட்டுச் செல்வாள். எங்கு சென்றாலும் சந்திராவும் கலைவாணியும் ஒன்றாகவே செல்வர். அவர்களிடையேயான உறவு  மிகவும் நெருக்கமானதாக கலைவாணி எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால், உண்மையில்,  தனது  அவசர உதவிகள், வீட்டில் நடக்கும்  விசேஷங்களுக்கு பொருட்கள் வாங்க, சந்திராவின் காதலுக்கு தூது செல்ல என்று அவளது தேவைகட்கு எல்லாம் பயன்படுத்தினாள். இது பல நாட்களாக கலைவாணிக்கு புரியவில்லை.


ஒருமுறை, கல்லூரியில் சுற்றுலா செல்ல ஏற்பாடாயிருந்தது. கலைவாணியின் பெற்றோர் ஏதோ காரணத்திற்காக செல்ல வேண்டாமெனக் கூற, அவர்களை சமாதானப்படுத்தி கலைவாணியையும் சுற்றுலாவுக்கு வரச் செய்தாள். சுற்றுலாவின்  போது, கலைவாணிக்கு சற்று உடல்நலக் குறைபாடு ஏற்பட, மிகவும் சோர்வாக அமைதியாக இருந்தாள். அவளால் கலகலப்பாக இருக்க முடியவில்லை.இதை உணர்ந்து கொள்ளாத சந்திரா, மற்ற தோழியருடன் சேர்ந்து கலைவாணியை மிகவும் உதாசீனப் படுத்த, மிகவும் வருத்தப்பட்டாள் கலைவாணி. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சந்திராவுடன் பழக ஏனோ தயங்கினாள் கலைவாணி.


நான்கைந்து மாதங்கள் சென்றிருக்கும். அவர்களது பாடம் சம்மந்தமாக, ஏதேனும் நிறுவனத்தில் ஆறுமாத காலம் பணியாற்றி, திட்ட அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். அதற்காக, பல நிறுவனங்கள் தேடி அலைந்தால் கலைவாணி. இறுதியில், வெளியூரில் இருக்கும் ஓர்  நிறுவனத்தில் வாய்ப்பு கிடைக்க, அங்கு சேர்ந்தாள். அங்கு முதல் நாள் சென்ற அவளுக்கு, பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. அங்கு ஏற்கனவே சந்திரா சேர்ந்திருந்தாள். ஆனால், அதைப் பற்றி கலைவாணியிடம் ஏதும் கூறவில்லை. இதனை அறிந்தபோது, கலைவாணி, இந்த விஷயம் அவளை பாதித்ததாக காட்டிக் கொள்ளவில்லை.


ஒருமாதத்தில் பொங்கல் விடுமுறை வர, விடுதியில் தங்கியிருந்த மாணவியர் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல பிரயாணத்திற்கு பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்தனர். அன்று மாலை, சந்திரா, கலைவாணி , இன்னும் சில தோழிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, ஊருக்கு செல்வது பற்றி பேச்சு எழ, சந்திரா கலைவாணியிடம், பதிவுச் சீட்டு முன்பதிவு செய்தாயிற்றா என்று வினவினாள். அதற்கு கலைவாணி, தனது பெற்றோர் அவள் இருக்குமிடத்திற்கே வந்து விடுவதாக சொல்லியிருப்பதாகவும், அந்த விடுமுறையை அவர்கள் குடும்பத்துடன் அங்கேயே கழிக்கப் போவதாகவும் கூற, சற்றும் எதிர்பாராமல் " அப்போ, பொங்கலுக்கு முன்னாடி போகி வருமே? இங்க இருந்தா எப்படி கொண்டாடுவீங்க? " என்றவள், சட்டென்று " கலைவாணி போகிக்கு அவளே அவளை எரிச்சுக்குவாடி" என்று சொல்லி கொல்லென்று சிரித்தாள்.  அதைச் சற்றும் எதிர்பாராத கலைவாணி, கலங்கிய கண்களுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள்.


" சேரிடம் அறிந்து சேர் " 

என்ற கூற்றில் பொதிந்திருக்கும் மாபெரும் உண்மையை அன்று தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்தாள்  கலைவாணி.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அனுபவம் அனைத்தையும் கற்றுக் கொடுக்கும்...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உண்மைதான், அருமையான கதை..

Tamizhmuhil Prakasam said...

@ திண்டுக்கல் தனபாலன்

உண்மை தான் ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Tamizhmuhil Prakasam said...

@ கிரேஸ்

தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி.

Post a Comment