blank'/> muhilneel: மனக் கோயில்

Sunday, August 4, 2013

மனக் கோயில்

            

             சாருமதிக்கு கோவிலுக்கு செல்வதென்றாலே ஓர்  புது உற்சாகம் அவளையறியாது வந்து தொற்றிக் கொள்ளும். அது ஏனென்று அவளுக்கே புரியாத புதிர் தான். இத்தனைக்கும் அவள் விழுந்து விழுந்து சாமி கும்பிடுபவளும்  இல்லை. எங்குமே கிட்டாத அளவிலா மனமகிழ்வும், நிறைவான மனமும் அவளுக்கு கோவிலில் கிட்டியது. அர்ச்சனை, அபிஷேகம், நன்கொடை என்று எந்த தெய்வத்திற்கும் அவள் செய்தது கிடையாது. தெய்வ தரிசனத்தில் மனநிம்மதி அடைந்தாள். கோவிலில் பூஜை வேளையின் போது தீப ஆராதனை ஒளியில் இறைவன் அவளைக்கண்டு புன்னைகைப்பது போலவே உணர்வாள்.

              தனக்கும் இறைவனுக்குமான நெருக்கத்தினை அவள் தன் தாய் நாட்டினை விட்டு வெளி தேசத்திற்கு வந்ததும் தான் உணர்ந்தாள். இங்கும் கோவில்கள் இருக்கிறதென்று அறிவாள். ஆனால்,  எங்கு இருக்கிறதென்பது தெரியாது. இணையத்தில், கூகுள் வரைபடங்களின் உதவியோடு, தாம் இருக்கும் இடத்திற்கு அருகில் எங்கேனும் கோயில்கள் இருக்கின்றனவா என்று தேடிப் பார்த்தாள். அவளது அதிர்ஷ்டம், அவர்கள் இருந்த பகுதியில் ஓர் அனுமார் கோவில் இருந்தது. வார இறுதி நாட்களில் கடைகளுக்குச் சென்று, அந்த வாரத் தேவைக்கான பொருட்களை வாங்கி வரவே சரியாக இருக்கும். வார நாட்களில் ஏதேனும் ஓர் நாள் விடுமுறை கிட்டினால் நன்றாய் இருக்குமே என்று எண்ணினாள். அவளது எண்ணம் விரைவில் நிறைவேறியது. அந்த நாள் வெள்ளிக் கிழமையாய் அமைந்ததில் அவளுக்கு இரட்டிப்பு சந்தோசம்.
    
            கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றனர். மிகப்பெரிய பரப்பளவில் இருக்கும் ஓர் வணிக வளாகத்தில்  ஒரு பகுதியில் அந்தக் கோயில் அமைந்திருந்தது.உள்ளே சென்று, ஆஞ்சநேயரை கண்குளிர தரிசித்தனர். வெண்ணெய்க் காப்பு  அலங்காரத்தில், புன்னகை தவழ வீற்றிருந்தார்  ஆஞ்சநேயர். பூஜை வேளை நெருங்க நெருங்க மக்கள் கூட்டமாய் வந்தனர். வந்திருந்த மக்கள் பலரும் மலர் மாலைகள், வண்ண வண்ண புஷ்பங்கள் எல்லாம் கொண்டு வந்திருந்தனர். இதைக் கண்ட சாருமதி, " இவர்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகிய வண்ண மலர்கள் கிடைத்தன? " என்று எண்ணினாள். ஏனெனில், அது குளிர் காலம். மரங்களனைத்தும் இலைகளை உதிர்த்து விட்டு, கிளைகள் மட்டும் நெடிதுயர்ந்து நின்றிருந்தன.

                         தீப ஆராதனை முடிந்து அனைவருக்கும் தீப தரிசனம் காட்டப்பட்டது. தீபத்தினை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். அதன் பின், அவளுக்கு அருகிலிருந்த அனைவரும் தீப ஆராத்தியை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டனர்.  காணிக்கை செலுத்த எண்ணியவளாய் சாருமதி, கைப்பையை திறந்தாள். ஆனால், அது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளாய் நிரம்பியிருந்தது. கைப் பையை மூடிவிட்டு, தீபத்தினை தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள். அதன் பின், இறைவனுக்கு படைக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள், அனைவருக்கும் பிரசாதமாய் வழங்கப் பட்டது.அர்ச்சகர்  இவர்களுக்கு பிரசாதம் கொடுக்கும்போது ஏதோ, வேண்டா வெறுப்பாக  கொடுத்தது போல உணர்ந்தாள் சாருமதி. அவளுக்கு என்னவோ போல் இருந்தது.

                      அன்னையின் மடியில் தங்குதடையின்றி தவழ்ந்தாடும் கிள்ளை போல், சுதந்திரமாய் தன் மன எண்ணங்களை, தன்  இன்ப துன்பங்களை, வெற்றி தோல்விகளை இறைவனிடம் பகிர்ந்து வந்தவளுக்கு, அந்தச் சூழலும், சுற்றமும்  அவளை  ஒதுக்கி வைத்து உதாசீனப் படுத்துவது போல் தோன்றியது. முதல் முறையாக அவள், கோவிலில் ஏதோ அந்நியப் படுத்தப்பட்டவள் போல உணர்ந்தாள்.

" இறைவா ! உன்னை நான் என் மனக் கோயிலில் வைத்தே ஆராதிக்கிறேன். உன் பூரண அருளை எனக்கு அளிப்பாய் !!!"  என்று அவளது மனம் அரற்றிற்று. 


2 comments:

RajalakshmiParamasivam said...

உங்கள் சொந்த அனுபவங்களின் தாக்கம் இந்தப் பதிவில் தெரிகிறது.கோவிலில் எப்பவுமே காணிக்கை செலுத்தினால் ஒரு மாதிரி இல்லையென்றால் வேறு மாத்ரி தான் நடத்தப் படுகிறோம். இந்தியாவிலேயே அப்படித் தான்.

சில விஷயங்களை நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்தப் பதிவு.

Tamizhmuhil Prakasam said...

தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் தோழி !!!

Post a Comment