blank'/> muhilneel: தெளிவு பிறந்தது !!!

Friday, August 16, 2013

தெளிவு பிறந்தது !!!

பாலன் ஒரு சிறந்த உழைப்பாளி. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பம் என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கிடைக்கும் இலவசங்களை பயன்படுத்தியும் தினம் கூலி வேலைக்குப்போயும் சந்தோஷமாகவே வாழும் ஒரு சாதாரண இந்திய பிரஜை. 

அவன் மனைவியும் அன்பானவள். நன்றாக சென்று கொண்டிருந்த குடும்பம் இப்போது ஏனோ சலிப்பதாகத்தோன்றியது பாலனுக்கு.
வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும், மனைவிக்குத் தேவையானதை எல்லாமே தான் வாங்கித்தர வேண்டும் என்ற இரு கனவுகள் மட்டுமே அவனுக்கு இருந்தது. அது அப்படியே நிறைவேறியும் வந்தது. 

கடந்த வருடம் இந்திராகாந்தி வேலைவாய்ப்புத்திட்டம் வந்த பின் அவன் மனைவியும் வேலைக்குப்போனாள். முன்பெல்லாம் அவளுக்குத்தேவையான பணம் கொடுக்கும் போதும் குடும்பத்திற்குத்தேவையான பொருட்களை வாங்கி வரும் போதும் அவனுக்கு ஒரு பெருமிதம் உண்டாகும். குடும்பத்தை நன்றாக கவனிக்கிறான் என்ற மகிழ்ச்சி மனநிறைவு ஏற்படும்.
ஆனால் இப்போதெல்லாம் அவன் மனைவி அவனிடம் தன் தேவையை எதுவும் சொல்வதில்லை. அவளே வேலைமுடிந்து வரும் போது தேவையானவற்றை வாங்கி வந்துவிடுகிறாள்.
தன் முக்கியத்துவம் குடும்பத்தில் குறைவதாக அவனுக்கு மனதில் தோன்றியது.

வேலை செய்யும் போதே எதற்கு இப்படி பாடுபடுகிறோம் என்ற சலிப்பு வர ஆரம்பித்தது.


 அன்று மாலை வழக்கத்திற்கு மாறாக, சீக்கிரமாகவே வீட்டிற்கு வந்து விட்டான் பாலன். வீட்டில் அவனது மனைவி பவானி இல்லை.வெறிச்சென்று இருந்த வீட்டைப் பார்த்த அவனுக்கு என்னவோ போல் இருந்தது. அடுப்படியில் இருந்த பாத்திரத்தில் இருந்த பழைய சாதத்தின் தண்ணீரை ஒரு தம்ளரில் ஊற்றி சிறிது உப்பு போட்டு குடித்துவிட்டு வந்து திண்ணையில் அமர்ந்தான். அசதியில் மெல்ல அப்படியே கண்ணயர்ந்தவனை, ராமய்யாவின் குரல் எழுப்பியது. 

" என்ன பாலா, வாசல்ல படுத்து உறங்கீட்டு இருக்க ? " என்றார் ராமையா.

" பவானி புள்ள வேலைக்கு போயிருக்கு. இன்னும் வரல. அது வந்துரும்னு திண்ணைல காத்து இருந்தேன். அப்படியே அசதில கண்ணசந்துட்டேன் போல.வாங்க உக்காருங்க மாமா. செத்த நேரம் பேசிக்கிட்டு இருப்போம்." என்றான்.

" உன் வேலை எல்லாம் எப்புடி போயிட்டு இருக்கு ? பவானி புள்ளையும் புதுசா வேலைக்கு போகுது போல? " என்றார்.

" என் வேலைக்கு என்ன ? அதே, மாடு மாதிரி நாளெல்லாம் உழைப்பு தான். சம்பளம் தான் உசந்த பாடு இல்ல.   ஏதாவது அவசரத்துக்கு கடன உடன வாங்கினாலும், அத தீக்கறதுக்கே சம்பளம் சரியாப் போயிடுது.என்ன செய்ய ? நான் தினம் விடியக்காலைல நம்ம ஊர் கூட்டுறவு பால் பண்ணையில பால் எடுத்து   ஊத்தலாம்னு நினைச்சு வெச்சிருக்கேன். பவானி புள்ளைய ராணியாட்டம் வெச்சுக்கனும்னு நினைக்கிறேன்.அந்தப் புள்ள வேலைக்கு போறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா" என்றான் பாலன்.

அப்போதுதான்  வேலையிலிருந்து வந்திருந்த பவானி, " வாங்க  சித்தப்பா, எப்ப வந்தீக? ஒரு நிமிஷம் இருங்க. காபித்தண்ணி கலந்துட்டு வந்துடறேன்." என்றவாறு  விறுவிறுவென்று வீட்டினுள் சென்றாள். 


" அந்தப் பிள்ளை உனக்கு ஒத்தாசையா இருக்கணும்னு பாக்குது ஐயா. அதுவும் பத்து வரைக்கும் படிச்சிருக்கு. தன்னோட படிப்பு உனக்கு உபயோகமா இருக்கணும்னு   நினைக்குது.  பக்கத்துல இருக்குற  சின்னப் பிள்ளைங்களுக்கு சாயந்திரம் வீட்டுப்பாடம் செய்ய, தெரியாதத சொல்லிக் குடுக்கன்னு, டியூசன் எடுத்துச்சு. அதுல நிலையா ஒரு வருமானம் இல்ல. நீயும் குடும்பத்த காப்பாத்த  பால் பண்ணை, வயக்கூலி வேலைன்னு மாடா உழைக்கிற. உன் கஷ்டத்துல பங்கெடுக்க நினைச்சு  அந்தப் பிள்ளை வேலைக்கி போகுது.  தப்பா எடுத்துக்காத ஐயா. சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா நாளைப்பின்ன உன்னை மதிக்காம போயிடுமோ, குடும்பத்துல உனக்கு முக்கியத்துவம் இல்லாம போயிடுமோன்னு எல்லாம்  யோசிக்காத. அதுவும் சேர்ந்து உழைச்சு  காசு சேர்த்தா, நாளைப்பின்ன நல்லா வாழலாம்னு தான அது நினைக்கிது. அது தப்பில்லையே ஐயா. தேவையில்லாத சஞ்சலத்த மனசுல வளத்துக்காதப்பா. நிம்மதியா இரு. நல்லதே நடக்கும்." என்று  அவர் சொல்லிக் கொண்டிருக்கையில்   பவானி காபியோடு வந்தாள். காபியை வாங்கி குடித்து முடித்தவர், 

" சரி, நானும் கிளம்பறேன் பாலா. நேரமாச்சு. வரேனம்மா பவானி" என்றவாறு கிளம்பினார்.

பாலனுக்கு மனதிலிருந்த சஞ்சலம் தீர்ந்து தெளிவு பிறந்தது. வீட்டினுள் சென்றான். அன்பும் புரிதலும் நிறைந்த அவ்விடத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.No comments:

Post a Comment