blank'/> muhilneel: உறக்கத்திலோர் உளறல் !!!

Thursday, July 25, 2013

உறக்கத்திலோர் உளறல் !!!

                      


                    ஜானவி அந்தக் கல்லூரியில் முதலாமாண்டு வேதியியல் பாடப்பிரிவில் புதிதாக இணைந்திருந்தாள் . கல்லூரி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாத காலம் சென்ற பின்னரே அவள் வந்து சேர்ந்திருந்தாள் . பொறியியல் நுழைவுத்  தேர்வெழுதி விட்டு, முடிவுகளுக்காய் காத்திருந்தாள் . அவளது மதிப்பெண்கட்கு வெளியூரில் உள்ள புகழ் பெற்ற பொறியியற் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், தங்களது பிள்ளையை தங்களை விட்டு வெகு தொலைவிலிருக்கும் கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, அவளது பிரிவால் கஷ்டப்பட அவளது பெற்றோர் விரும்பவில்லை. எனவே, அவளை தங்களது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் கல்லூரியிலேயே சேர்த்தனர்.


                             அன்றாடம் கல்லூரிக்கு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் பேருந்தில் பிரயாணம்.  காலை மாலை வேளைகளில் இரண்டு மணிநேர பிரயாணத்தால் அவள் மிகவும் சோர்வுற்றாள் . இதனால், அவளுக்கு பாடங்களில் சரிவர கவனம் செலுத்த இயலவில்லை. காலையில் அவசர அவசரமாக   உண்டும் உண்ணாமலும் ஓடுவாள். மாலையிலோ, பயணக் களைப்பிலேயே சீக்கிரமாய் உறங்கிப் போவாள். பாடங்கள் படிக்க போதிய நேரம் இல்லாமல் இருந்தது. கல்லூரி விடுதியில் தங்கிக் கொண்டால், அலைச்சலும் மிச்சமாகும், படிக்கவும் நிறைய நேரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், விடுதியில்  சேரப்போவதாக பெற்றோரிடம் கூறினாள். இதைக் கேட்டவுடன், அவர்களுக்கு என்னவோ போல் இருந்தது. மகளைப் பிரிய அவர்கள் விரும்பவில்லை. பின்னர், அவளது படிப்பு  கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அரைமனதாக ஒப்புக் கொண்டனர். இதுநாள் வரை, தன பெற்றோரை பிரியாத ஜானவிக்கு மனது என்னவோ போலிருந்தது. ஒருவாறு மனதினை தேற்றிக் கொண்டாள் . வார இறுதியில் வீட்டிற்கு வந்து செல்லலாம் என்றபடியால், அவளது மனதிற்கு ஆறுதலாய் அமைந்தது.


                                                       கல்லூரி விடுதியில் ஜானவிக்கு கொடுக்கப்பட்ட அறையில் ஏற்கனவே நால்வர் தங்கி இருந்தனர்.இரண்டு இரண்டாமாண்டு மாணவிகள் அனிதா, கற்பகம், மூன்றாமாண்டு மாணவி சக்தி, முதலாமாண்டு மாணவி சந்தியா. ஐந்தாவதாய் ஜானவி வந்து சேர்ந்தாள். ஜானவி அறைக்குள் சென்று தனது உடைமைகளை வைத்து விட்டு, அனைவரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். மற்றவர்களது முகத்தில் அவ்வளவாக ஆர்வமில்லாது கடனே என்று அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஒரு மாத காலமாய் நால்வராய் மட்டுமே இருந்து பழகிய அவர்களுக்கு, ஐந்தாவதாய் வரும் ஒருவரை அனுசரித்துப் போக மனமில்லை. அவர்கள் ஏன்  இப்படி இருக்கிறார்கள் என்பது விளங்காமல் சற்று குழப்பமடைந்தாள். அவர்களது செய்கைகளும் நடத்தைகளும் சற்று வருத்தமளித்தாலும், தான் படிப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம். எவரைப் பற்றியும்  எண்ணி எதற்கு வீணான மனசஞ்சலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென  சகஜ நிலையில் இருக்க முயன்றாள்.


                                                            ஓர்நாள்  இரவு, விடுதியில் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க, எங்கும் நிசப்தம் குடிகொண்டிருந்தது. வெளி வராண்டாவில் இருக்கும்   மின்விளக்கின் ஒளியைத்   தவிர, மற்ற இடங்களில் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. அவ்வப்போது, பூச்சிகளின் சப்தம் மட்டுமே.திடீரென, அந்தப் பேரமைதியைக் குத்திக் கிழிக்கும் விதமாக, ஓர் குரல். தூக்கத்திலிருந்து பதறிப்போய்  எழுந்தாள்  சக்தி. முதலில் முனுமுனுப்பாய் ஆரம்பித்த அக்குரல் மெல்ல மெல்ல உயர்ந்தது. சப்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் முற்றும் பார்த்தாள். ஜானவி பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் பேசுவது எதுவும் ஓர்  கோர்வையாக இல்லாமல், ஏதோ உளறல் போல் இருந்தது. அறையிலிருந்த மற்ற நால்வரும் பயந்து போய்  விழித்துக் கொண்டனர். யாரும் எழுத்திருக்காது படுத்தபடியே வைத்த கண் வாங்காது ஜானவியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென ஜானவி, தடதடவென்று  உருண்டு வந்து, தன்  அருகினில் படுத்திருந்த சக்தியினை வேகமாக கட்டிலுக்கடியில் தள்ளிவிட்டாள் . மேலே காலை தூக்கிப் போட்டவள், சக்தியைப் பார்த்து, " யார் நீ ? " "யார் நீ ?" என்று பெரும் கூச்சலிட்டாள் . எதிர்பாரா நேரத்தில், எதிர்பாராததொரு நிகழ்வினைக் கண்ட சக்தி பயத்தில் அப்படியே உறைந்து போனாள். வீறிட்டு அலறினாள் . இதற்குள், அனைவரும் பயந்து போய், வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து பயத்துடன் சுவற்றின் ஓரமாய் ஒதுங்கி நிற்க, சக்தியும் ஒருவாறு சமாளித்து கட்டிலுக்கடியிலிருந்து எழுந்து மற்ற மாணவியருடன் நின்று கொண்டாள். அனைவரும் பயத்தில் ஏதும் புரியாது நின்று கொண்டிருக்க, படுக்கையில் இருந்து எழுந்த ஜானவி, அப்போது தான் உறக்கத்திலிருந்து  எழுந்தவள் போல் ,    " என்னாச்சு ?       ஏன் எல்லாரும் பயந்து போய்  நிக்கறீங்க? " என்றவாறு மற்றவர்களிடம் வந்தாள். ஆனால், அனைவரும் பயந்து ஒதுங்கினர்.        


                                                      அடுத்தநாள் காலை, இச்செய்தி  விடுதி முழுவதும் பரவியது. விடுதி மாணவிகள் அனைவரும் ஜானவியை விசித்திரமாகப் பார்த்தனர். அவளது வகுப்பில் மற்ற மாணவியருக்கும் இவ்விஷயம் தெரியவர, எவரும் அவளுடன் பேசவில்லை.  இன்னும் பலரோ பயந்து ஒதுங்கினர். சிலர் ஒருபடி மேலே போய்  " இவளுக்கு பேய் புடிச்சிருக்கு போல"  என்றனர். சிலர்           "இவளுக்கு பைத்தியம்" என்று தங்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.  இதையெல்லாம் கேட்ட ஜானவி, கண்கள் குளமாக மௌனமாய் நடந்து கொண்டிருந்தாள் . ஜானவியின்  பின்னால் கூட்டமாக, அவளது வகுப்பு மாணவியர் சிலர் வந்து  கொண்டிருந்தனர். அவர்கள் மெல்லிய  குரலில் " ஏய் ! ஜானவி போறா...இவளுக்கு பேய் புடிச்சிருக்கான்னு பாத்துரலாம்.பேய்க்கு முன்னாடி நின்னு பேசுனா தான் கேட்கும்.பின்னாடி இருந்து பேசுனா தெரியாது. இவ பேயான்னு சோதனை பண்ணிருவோம்" என்று பேசி இருக்கின்றனர்.இதனால் மிகவும் மனமுடைந்து போனாள்  ஜானவி. அறையில் உடனிருக்கும் மாணவியரோ , ஜானவி அறையில் இருந்தால், படீரென கதவை அடைப்பதும், எவரையோ திட்டுவதைப் போல் மறைமுகமாக ஜானவியைத் திட்டுவதும் என  அவளை துன்பப் படுத்தினர். இதனால், காலையில் அறையை விட்டு வெளியேறினால், மாலையில் அறையில்  எவருமில்லாத நேரத்தில் வந்து தன்  வேலைகளை முடித்துக் கொள்வாள்.இரவிலும் வெகுநேரம் கழித்து அனைவரும் உறங்கிய பின்னரே, உறங்க வருவாள். அவளது நிலை மிகவும் பாவமாக இருந்தது.


                                                   சில நாட்களாக ஜானவியை கவனித்து வந்தாள் சக்தி. அவள் ஏதோ சோகத்தில் இருப்பதாய் உணர்ந்தாள். மாணவியர் அவளை கிண்டல் செய்வதையும் கேள்விப்பட்டாள். மிகவும் வருத்தமுற்றாள். அவளது மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை புரிந்தவளாய், அன்று மாலை வகுப்புகளனைத்தும் முடிந்த நிலையில் ஜானவியை அவளது வகுப்பில் சென்று பார்த்தாள்.  ஒருவித பயத்துடனே சக்தியை நோக்கி வந்தாள் ஜானவி. " பயப்படாத ஜானவி. " என்று அவளுக்கு தைரியமளித்தாள். " அன்றைக்கு  இராத்திரி என்ன நடந்ததுன்னு தெரியுமா? " என்றாள். "தெரியலையே அக்கா... எல்லாரும் பயந்து போய் நின்னுட்டு இருந்தீங்க. நானும் வந்து உங்களோட நின்னப்ப , எல்லாரும் என்னையப் பாக்கவே பயந்து ஒதுங்குனீங்க. எனக்கு ஒண்ணுமே புரியல. நானும் பயந்துட்டேன் அக்கா" என்றாள் .  சக்தி மெதுவாக அந்த இரவு நடந்த விபரங்களை ஒவ்வொன்றாகச் சொன்னாள். " நான் இப்படி எல்லாமா அக்கா பண்ணினேன் ? எனக்கு எதுவுமே தெரியாது அக்கா. சாரி " என்றாள் ஜானவி.  தான் ஏதோ  உடல் கோளாறுக்காக மருந்து எடுத்துக் கொள்வதாகவும், அம்மருந்தின் பக்க விளைவுகள் இவ்வாறு இருக்கக்கூடுமென மருத்துவர் கூறியிருப்பதாக தெரிவித்தாள். உண்மையை அறிந்து கொண்ட சக்தி, அதன்பின் அவளுடன் எப்போதும் போல் சகஜமாகப் பழகினாள்.


                                                        ஒருமாதம் சென்றுவிட்ட நிலையில், ஜானவியுடன் அனைவரும் சகஜமாகப் பழகாவிட்டாலும், ஒரு சிலர் அவளுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொண்டனர். தனிமைத் துயர் தீர்ந்தபடியால், அவளும் மகிழ்வுடன் தன் பாடங்களில் கவனம் செலுத்தலானாள் . ஒருசிலரோ, இன்னும் அவளை கிண்டலடித்துக் கொண்டுதான் இருந்தனர். அவர்களை அவள்  ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. தன் தோழியருடன் மகிழ்வாகவே தன் கல்லூரி வாழ்வை அனுபவித்தாள்.

                                              மீண்டும் ஓர் நாள் இரவு, ஜானவி தூக்கத்தில் கை கால்களை உதற  ஆரம்பித்தாள். ஏதேதோ பேசினாள் . இம்முறையும் அறையில் உடனிருந்த மற்ற மாணவியர் அனைவரும் பயப்பட, சக்தி மட்டும் அருகில் சென்று அவளை எழுப்பினாள். அவள் எழுந்திரிப்பதாய் இல்லை. பெருங்குரலெடுத்து ஏதோ பேச ஆரம்பித்தாள். மனதினுள் இதற்கு முன் ஏற்பட்ட அனுபவம் சற்று பயத்தை ஏற்படுத்தினாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , ஜானவியை உலுக்கினாள். " ஜானவி !  ஜானவி ! எழுந்திரு ! என்னாயிற்று உனக்கு ? எழுந்திரு!  " என்று சற்று சப்தமாகக்  கூறினாள். உறக்கம் கலைந்தவளாய் எழுந்த ஜானவி , " என்னக்கா ஆச்சு ? ஏதாவது பேசினேனா? " என்றாள். "ஆமாம் ! " என்றாள்  சக்தி . " பயமா இருக்கு அக்கா! நான் உங்க கையைப் பிடிச்சுட்டு படுத்துக்கறேன்" என்ற ஜானவி, சக்தியின் கையைப் பிடித்தவாறே உறங்கிப் போனாள். அதன்பின், ஓர்நாளும் ஜானவி உறக்கத்தில் பேசவில்லை.

                                                        தனக்கு ஆதரவாயும், பக்கத் துணையாகவும் ஒருவர் இருக்கிறார் என்ற மனோதிடம் ஜானவிக்கு ஏற்பட, அவளது பயம் அனைத்தும் இருந்த இடம் தெரியாது பறந்தோடியது.

p.s.

Somniloquy
           Somniloquy or sleep-talking refers to talking aloud while asleep. It can be quite loud, ranging from simple sounds to long speeches, and can occur many times during sleep. Listeners may or may not be able to understand what the person is saying. Sleep talkers usually seem to be talking to themselves. But sometimes, they appear to carry on conversations with others. They may whisper, or they might shout.actions may be funny or violent. Things that can cause sleep talking include : certain medications, emotional stress, fever, mental health disorder.



Source:
wikipedia.org

webmd.com

 நன்றி. வல்லமை மின் இதழ் 
http://www.vallamai.com/?p=37158 

2 comments:

Vijayan Durai said...

blogger Follower கேட்ஜட் வைக்கவும், Networked blog வேண்டாம்...

Tamizhmuhil Prakasam said...

blogger follower gadget ம் வைத்துள்ளேன் நண்பரே....

Post a Comment