blank'/> muhilneel: ஒரு வெயில் பொழுதில்....

Monday, July 8, 2013

ஒரு வெயில் பொழுதில்....


   
      
      இரயில்வே கேட்டைத் தாண்டியதும் சிற்றுந்தின் (mini bus)நட த்துனர் விசில் கொடுக்க, ஒரு நிமிடம் நின்றுவிட்டு கிளம்பத் தயாராய் பேருந்திலிருந்து சட்டென்று இறங்கிக் கொண்டேன்.

     ரோட்டின் மறுபக்கம் சென்று,அந்த ரோட்டின் முதல் சந்தினுள் நுழைந்தேன். அந்தச் சந்து குறுகலாகவும்,ஒரே நேர் சாலையாகவும் சென்றது. வழியெங்கும், ஆங்காங்கே தெருவின் ஓரங்களில் காவல் தெய்வங்களாய் நின்றிருந்த தேவி கருமாரியம்மன், தேவி காளியம்மன், கருப்பசாமி, சுடலை மாடன் என அனைவரையும் வரிசையாய் வணங்கியபடியே சென்று கொண்டிருந்தேன்.

       அனைத்து தெருக்களும் ஒரே மாதிரியாய், குறுகலாய், கிட்டத்தட்ட ஒரே மாதிரி வீடுகளுடன் இருந்தன. ஓரிரு முறையே வந்து பழகியவர்கள், தாங்கள் தேடி வந்த விலாசங்களை கண்டு பிடிப்பது சற்று சிரமம். புதிதாய் வருபவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.

       சற்று தூரம் வந்ததும், தெரு முடிந்த இடத்தில் சாலை இரண்டாய்ப் பிரிய, இரு மருங்கிலிருந்த சாலைகளிலும், வழிநெடுகிலும் தொழிற்சாலைகள். மாவு அரவை தொழிற்சாலை, காபி அரவை தொழிற்சாலை, எண்ணெய் ஆட்டும் தொழிற்சாலைகள் என வரிசையாய் பலவகை தொழிற்சாலைகள், பலவகை வாசனைகளுடன்.

       வீடுகளின் வாசல்களிலும், திண்ணைகளிலும் பெண்களும், சிறுமிகளுமாய் அமர்ந்து தீப்பெட்டி ஒட்டிக் கொண்டிருந்தனர். ஒருவர் தாளில் பசை தடவி, குச்சி வைத்து ஒட்டி, வால்களாகப் போட, ஒருவர் அதை மடித்து, அச்சுக் கட்டையில் வைத்து, சில்லடைத்து தீப்பெட்டிகளாய் ஒட்டிப் போடுவதுமாய் மும்முரமாய் வேலை நடந்து கொண்டிருந்தது. பல சமயங்களில், ஒருவரே வால் மடித்து, சில்லடைத்து தீப்பெட்டிகள் ஒட்டிப் போடுவதும் உண்டு.

        ஊரே மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்த அந்த மதிய வேளையில், சூரியனும் கண்ணும் கருத்துமாய் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான். நன்கு பளீரென தகதகக்கும் சூட்டுடன், தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி, பூமியின் மீது, தன் கதிர்களை பரப்பிக் கொண்டிருந்தான்.

            சட்டென்று, யாரும் எதிர்பாரா நேரத்தில், எவரும் எதிர்பாராததொரு மாற்றம். பளபளவென வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்த வானம், சட்டென்று தன் ஆபரணக் கடையை மூடிக்கொண்டது போல், இருள் சூழ்ந்து கொண்டது. ஆம்...வானில் மழை மேகங்கள் அனைத்தும் அவசர மாநாடு கூட்டிவிட்டன. பேச்சும், விவாதமும் சற்று அதிகமாகவே இருப்பது போன்று, இடியும் மின்னலும் போட்டி போட்டுக் கொண்டு வந்தன. கூட்டத்தில் நல்லதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது போலும்... படபடவென்று கைத்தட்டல்களாய் மழை முத்துக்கள் சிதற, அந்த அழகான மகிழ்வான தருணமதில், தண்மையை இரசித்தபடி நானும் நிற்கிறேன்.

2 comments:

vimalanperali said...

அப்படியே நில்லுங்கள்.இயற்கைஅயை ரசிக்கிற போங்கு எத்தனை பேருக்கு வாய்க்கும்?அது உங்களுக்கு வாய்க்கவும் கைவரப்பெறவுமாய்/வாழ்த்துக்கள்.

Tamizhmuhil Prakasam said...

தங்களது அன்பான வாழ்த்துக்கும், மேலான கருத்துரைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா..

Post a Comment