blank'/> muhilneel: இயற்கையின் வரமும் பூரணத்துவமும்

Monday, July 15, 2013

இயற்கையின் வரமும் பூரணத்துவமும்




Road To Munnar From Bodinayakanur
              


             எப்பொழுதும் ஆரவாரத்துடனும் பரபரப்புடனும் இயங்கிக் கொண்டிருக்கும் அந்தச் சாலையில், ஓர் பள்ளிக்கூடம், திருமண மண்டபம், மூன்று டீக்கடைகள், தொழிலாளர் சங்கமொன்று, இரண்டு மளிகைக் கடைகள்  என்று பலவகையான இடங்கள், அங்கு மனிதர்களும் வந்து போவதுமாய் இருந்தார்கள். அந்தச் சாலையும் , நகர பேருந்து நிலையத்திலிருந்து வருகின்ற சாலையும் சந்திக்கும் இடத்தில், கம்பீரமாய் சிலையாய் சிரித்துக் கொண்டிருந்தார் பெருந்தலைவர் காமராசர்.
                     
                 அந்தச்  சாலையின் இருமருங்கிலும், பல பிரிவுகளாய், பல தெருக்கள், பல்வேறு பெயர்களுடன். முருகன் டீக்கடையை ஒட்டியிருந்த சந்தினுள்  நுழைந்து  நடக்க, அங்கே சாலை குறுகலாய் ஆகி, சாலையின் இரு மருங்கிலும் எதிரெதிராய் பல வீடுகள். உள்ளே, மேலும் பல தெருக்கள். தெரு முடிந்த இடத்திலிருந்து, வயல்வெளிகள் ஆரம்பமாயின. நீர்ப்பாசனத்துடன் இருந்த வயல்களில், பச்சைப் பசேலென பயிர்கள் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன.

              ஒரு சிறு தெரு முற்றுப் பெற்ற இடத்தில், மண் மேடாய் காட்சியளித்தது. அந்த மண் மேட்டில், கோழிகளும், சேவல்களும் தம் குஞ்சுகளுடன் மண்ணைக் கிண்டிக் கிளறிக் கொண்டிருந்தன. அங்கே, அடர்ந்து, கிளைகளைப் பரப்பி, பல புள்ளினங்கட்கு அடைக்கலமளித்து காத்து வரும் உயர்ந்த நாவல் மரம். நாவல் பழங்கள் கனியும் காலத்தில், பழங்களனைத்தும் கரும் ஊதா நிறத்தில், காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்கும். சற்று பலமான காற்றடித்தால், பழங்களனைத்தும் உதிர்ந்து மண்ணில் விழுந்து கிடக்கும். அவற்றுள் பல, பறவைகள் கொத்திப் போட்டதாய் இருக்கும். பழம் கோத்த வரும் பறவைகள் கூட்டம் ஒருபுறம், கிழே சிதறிக் கிடக்கும் பழங்களை எடுக்க வரும் சிறுவர் கூட்டம் ஒருபுறமென, காலை வேளைகளில், அம்மரத்தடியே கலகலவென பல வகையான ஒலிகளால் நிரம்பி இருக்கும்.

                         நாவல் மரத்திற்கு சற்று தள்ளி, மிகப் பழமையானதொரு புளிய மரம். அதன் வயதறிந்தவர்கள், கிட்டத்தட்ட ஐம்பது அறுபதாண்டு கால பழமையான மரமாக இருக்கலாம் என்று கூறுவர். அம்மரம், அந்தப் பகுதிவாழ் பெண்களுக்கு, ஓர் வேலைவாய்ப்பினையும், வருமானத்திற்கான வழிதனையும் ஏற்படுத்திக் கொடுத்ததென்று சொன்னால், அது மிகையாகாது.மரத்திலிருந்து உதிரும் புளியம்பழங்களை சேகரித்து, அவற்றிலிருக்கும் கொட்டைகளைத் தட்டி எடுத்து, நார்க் கழிவுகளை நீக்கி, சுத்தமான புளியை, கூட்டுறவு சங்கத்தினில் கொடுத்தால், ஒரு கிலோ புளிக்கு இவ்வளவு என விலை நிர்ணயம் செய்து, எடுத்துக் கொள்வர். சில சமயங்களில், கூட்டுறவு சங்கமே மக்களுக்கு கொட்டைப் புளியை வழங்குவதும் உண்டு. இது போக, கோழி வளர்ப்பு, வாத்து வளர்ப்பு போன்ற சிறுதொழில்களிலும் மக்கள் ஈடுபட்டு வந்தனர். வயல்வெளிகளின் அருகில் கூட்டமாய்ச் செல்லும் வாத்துக்களின் அழகே தனி.

                           இயற்கையுடன் இயைந்த வாழ்வொன்றை மேற்கொள்ளும் அச்சிற்றூரை, இயற்கையன்னை மிகப் பொலிவுடனே அலங்கரித்து வைத்திருக்கிறாள் . ஊருக்கு மகுடமென அழகிய மலைச் சிகரங்கள், சுற்றிலும் வேலியென  அமைந்திருக்கும் தேயிலைத் தோட்டங்கள், மலையருவி என அமைந்திருக்கும் அவ்வூர்  இயற்கையின் வரமதையும், பூரணத்துவத்தையும்  பெற்றிருக்கிறது எனில், அதை மறுத்திட முடியுமோ ??  




4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

காட்சிகள் அப்படியே கண்முன்னே தெரிந்தன...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

Tamizhmuhil Prakasam said...

தங்களது அன்பான வாழ்த்துகட்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

Unknown said...

நான் வாழ்ந்த வாழ்க்கை ....நினைவுட்டியதர்க்கு நன்றி ....தொடரட்டும் உமது தமிழ் சேவை

Tamizhmuhil Prakasam said...

தங்களது வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் !!!

Post a Comment