blank'/> muhilneel: June 2012

Saturday, June 9, 2012

கோடையிலும் வீட்டை ஜில்லென்று வைத்துக்கொள்ள !!!

அக்னி நட்சத்திரம் முடிந்தும் கோடை காலம் போல வெயில் கொளுத்துகிறது. வீட்டிற்குள்ளேயே அனல் அடிக்கிறது. இதற்கிடையே மின் தட்டுப்பாடு வேறு மக்களை படுத்தி எடுக்கிறது. எனவே வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகளை கூறுகின்றனர் உள் அலங்கார நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.

குளிர்காலத்தில் ஜன்னலை அடைத்து வைத்திருக்க வேண்டிய சூழல் இருந்திருக்கும். கோடையில் வீட்டிற்குள் காற்று நன்றாக வர ஜன்னல்கள், வீட்டு வாயில்களை அடைத்துக் கொண்டிருந்த பொருட்களை அகற்றுங்கள். ஜன்னல் கம்பிகளில் படிந்திருக்கும் ஒட்டடை, தூசுகளை சுத்தமாக துடைத்து விடுங்கள். சுத்தமான காற்று அதிகமாக வருவதற்கு வசதியாக இருக்கும்.

கோடைகாலத்தில் ஜன்னல் திரைச்சீலைக்களை தண்ணீரில் நனைத்துப்போடுங்கள். அதேபோல் பால்கனியில் துணியை தொங்கவிட்டு அதை மணிக்கு ஒருமுறை ஈரமாக்க வேண்டும். இதனால், வீட்டுக்குள் வரும் அனல் காற்று ஈரத் துணிகள் மூலம் குளிர்ச்சியாக மாறி விடும். தரையிலும் அவ்வப்போது ஈரத் துணியால் துடைக்கலாம். பால்கனி, ஜன்னல்களுக்கு வெட்டி வேரில் கிடைக்கும் பாயை தொங்க விட்டு அதை நனைத்தும் குளிர்ச்சியை பெறலாம்.

மின் விசிறிகள் அழுக்கேறி இருந்தால் காற்று குறைந்து விடும். எனவே, வாரம் ஒருமுறை மின் விசிறி இறக்கைகளை துடைத்து பராமரித்தால் அதிக காற்று கிடைக்கும். இது பவர் கட் காலம். எப்பொழுது கரண்ட் போகும் என்று கூற முடியாது. எனவே அடிக்கடி கரன்ட் கட் ஆவதால் கைமேல் பலனாக உதவுவது ஓலை விசிறிகளே. எனவே, கோடையில் இவற்றை பத்திரப்படுத்தி வையுங்கள். பனை ஓலை விசிறியை எளிதில் கிடைக்கும் இடத்தில் எடுத்து வையுங்கள். அத்துடன் அவற்றை பக்கெட் நீரில் ஒரு மணி நேரம் நனைத்து வைத்து விட்டு பயன்படுத்திப் பாருங்கள். இயற்கை ஏசியாக காற்று வரும்.

வீட்டு மொட்டை மாடியில் வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம். அதேபோல் கிழக்கு, மேற்கு பக்க ஜன்னல்களில் கண்ணாடிகள் இருந்தால் சன் கிளாஸ் ஒட்டலாம். வீட்டைச் சுற்றிலும் செடிகளை வளர்க்கலாம். வீட்டிற்குள் செடிகள் வளர்ப்பதால் பசுமையால் குளிர்ச்சி ஏற்படும்.

http://tamil.boldsky.com/