blank'/> muhilneel: March 2012

Tuesday, March 13, 2012

கடவுள் பற்றி காமராசர்

        தலைவர் காமராசர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் வந்த நேரத்தில் ஒரு கிராமத்தின் பாழடைந்த கோயிலைப் பார்த்தார். அந்தக் கோயில் பழம்பெருமை வாய்ந்தது. ஆனாலும், சிதிலமடைந்து கிடந்தது. சுற்றுப்புற மதில்கள் உடைந்து பிரகாரம் திறந்து கிடந்தது. அங்கங்கே ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கோயில் கோபுரத்திலெல்லாம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து கிடந்தன. கோயில் குருக்கள் எப்போதாவது வந்து பூஜை செய்து மணியடிப்பார். சற்றும் எதிர்பாராமல் தலைவர் கோயிலுக்குள்ளே போய்விட்டார். சுற்றியிருந்த நாங்களனைவரும் அவருடன் சென்றோம். நான் கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகன். இது தலைவருக்கும் தெரியும். தலைவர் கோயில் வாசலில் இருந்த கல்வெட்டுகளையெல்லாம் பார்த்தார். புதராக மண்டிக்கிடந்த சாசனங்களையெல்லாம் துடைத்துவிட்டுப் பார்த்தார். பலிபீடம், கொடிமரம், நந்தி இவைகளிடமெல்லாம் போய் நின்று உற்றுக் கவனித்தார். இவரது ஒவ்வொரு செய்கையும் கட்சிக்காரர்களுக்கு வியப்பாயிருந்தது. கோயிலுக்கு வந்து உள்ளே சாமி கும்பிடப்போகாமல், எது எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று மற்றவர்கள் பேசிக்கொண்டனர். ஆனால், எனக்கு அவரைப்பற்றி நன்றாகத் தெரியும், கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை வாங்கிக் கொள்வார். விபூதி பூசிவிட்டால் மறுக்கமாட்டார். பரி வட்டமும் கட்டிக் கொள்வார். தீபாராதனையைத் தொட்டுக் கொள்வார். கோயிலை விட்டு வெளியில் வந்த மறு நிமிடமே பழம், தேங்காய் மூடி, மாலைகளை யார் பக்கத்திலிருக்கிறார்களோ அவர்களிடம் கொடுத்துவிடுவார்... விபூதி, குங்குமத்தை வீட்டுக்கு எடுத்துப் போகமாட்டார். பையில் பத்திரப் படுத்தவும் மாட்டார். அதற்குப் பெரிய முக்கியத்துவமும் கொடுக்க மாட்டார். கேட்டால், “கோயில்ல செய்ற மரியாதையை வாங்கிக்கணும் அதுதான் மனுஷ நாகரிகம். குருக்கள், அறங்காவலர், ஊர் ஜனங்க மனசு புண்படக்கூடாதில்லியா.... அதுக்கு மேல அதில ஒண்ணுமில்லே...!” என்பார்.

தலைவர் இந்தக் கோயிலைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக் கையிலேயே அந்தக் கோயிலின் குருக்களும், அறங்காவலரும் வந்துவிட்டனர். பிரகாரத்தைச் சுற்றிவந்த தலைவர், குருக்களைப் பார்த்து, “இந்தக் கோயிலக்கட்டி எவ்வளவு காலமாச்சு...?” என்றார். குருக்களும், நிருவாகிகளும் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்.“ஏன்ய்யா... குருக்கள்.... நீங்க எவ்வளவு காலமா இந்தக் கோயி லுக்கு மணியடிச்சிகிட்டு இருக்கீங்க.... இந்தக் கோயில பத்தின ‘தல வரலாறே’ உங்களுக்குத் தெரியாதா...? எந்த வருஷத்து பஸ்? எத்தனை கிலோமீட்டருக்கு எவ்வளவு பெட்ரோல் ஆகும்னு தெரியாம, ஒரு டிரைவர் அந்தக் காரை ஓட்டலாமான்னேன்?” என்று காமராசர் ஆரம்பித்ததும் குருக்கள் உள்பட எல்லோரும் ஆடிப் போனார்கள். தலைவரே மேலும் தொடர்ந்தார். இந்தக் கோயிலக் கட்டி எண் ணூத்து எழுபது வருஷத்துக்கு மேலாகுது. சோழ மாதேவி தானமா கொடுத்த “இறையிலி” நிலங்கள்தான் இந்தக் கோயில சுத்தி இருக்குது. இந்த ஊரும், இந்தத் தாலுக்காவுமே இந்தக் கோயில் சொத்துதான். அதிலேருந்து வர்ற வருமானத்துலதான் சாமிக்குப் பூஜை, புனஸ்காரமெல்லாம் பண்ணணும். குத்தகைதாரர்கள் அளக்கிற பகுதி நெல்லை வாங்கித்தான் சாமியாடிகளுக்கும், தேவரடியார்களுக்கும், பூக்குடலைத் தூக்குறவங்களுக்கும் சம்பளம் போடணும். சாமி நெலத்த விவசாயம் பண்ணிச் சாப்பிட்டுக் கிட்டிருக்கிற ஒருத்தனும் ஒரு பிடி நெல்லைக்கூட கோயிலுக்கு அளக்கலப் போலிருக்கு... அதனாலதான் சாமி இருட்டில கிடக்குன்னேன்.. !” என்று காமராசர் பேசப்பேச அத்தனை பேரும் அதிர்ந்து போய் நின்றனர். அந்தக் கோயில் சொத்தைச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்த ‘பெருச்சாளிகள்’ பலரும் அங்கே நின்று கொண்டிருந்தனர். தங்கள் அடிமடியிலேயே கை வைக்கிறாரே என்று அந்தக் குத்தகைதாரர்கள் நடுங்கிப் போயிருக்கக்கூடும்.

இதற்குள் குருக்கள்மார் சிலர் வந்து, ‘பிரசாதம், பொங்கல், வடையெல்லாம் தயாரா இருக்கு...!’ என்று ஆரம்பித்தனர்.“சாமியை இருட்டில போட்டுட்டு ஆசாமியெல்லாம் சாப்பிட்டுகிட்டிருக்கீங்க. பொங்கல், வடையையெல்லாம் ஏழை ஜனங்களுக்கு, சேரிப் பிள்ளைகளுக்குக் கூப்பிட்டுக் கொடுங்க...!” என்று சொல்லிவிட்டு வேகமாகத் தலைவர் கோயிலை விட்டு வெளியே வந்துவிட்டார். அறங்காவலர் குழு திகைத்துப் போய் நின்றது.தலைவர் அடுத்த ஊர் நிகழ்ச்சிக்குப் போவதற்காகக் காரில் ஏறினார். நானும் அவரோடு பயணம் செய்தேன். “கடவுள்பற்றி காமராசர் என்ன நினைக்கிறார்... பூஜை, வழிபாடு, நேம, நைவேத்தி யங்கள் பற்றி அவரது கருத்து என்ன?” என்பதையெல்லாம் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நெடுநாளைய அவா. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி நான் தலைவரிடம் மெல்ல ஆரம்பித்தேன்.

“கடவுள்னு ஒருத்தர் இருக்கார்னு உங்களுக்கு நம்பிக்கை உண்டா...?”“ இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்றது நல்ல காரியமா இருந்தா போதும். பக்தனா இருக்கறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா...?” என்றார்.

நான், “கடவுள் விஷயத்துல நேரு கொள்கையும், உங்க கொள்கையும் ஒண்ணாயிருக்கும் போலிருக்கே...” என்று ஆரம்பிக்கவும். அவரே, “அக்னாடி°ட்டுன்னு” சொல்றீயா...? நேரு ரெண்டப் பத்தியும் கவலப்படாதவர்தான். ஆனா... மனிதனை முன்னேற்றனும் , சமூகம் வளரும்ணும்கிறதுல அவர் கவனமாயிருந்தார்.. அதுக்கு மதமோ, கடவுளோ தடையாயிருந்தா அதைத் தூக்கிக் குப்பையில போடணும்கிற அளவுக்கு அவர் தீவிரவாதி. எப்படி யோசிச்சிப் பார்த்தாலும், சாதாரண மனிதனைக் கை தூக்கி விடணும்கிறதத்தானே எல்லா மதமும் சொல்லுது. சமுதாயத்துல பேதம் போகணும்... ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதுங்கிறதத்தானே மகான்கள் சொல்றாங்க. ஆனா, இன்னிக்கு நம்ம மதங்கள் அதப்பத்திக் கவலைப்படுதான்னேன்..? அவன் தலையைத் தடவியாவது, எவனை அழிச்சாவது தான் முன்னேறணும்னுதானே ஒவ்வொரு மடாதிபதியும் நினைக்கிறான்... இதுக்குக் கடவுள் சம்மதப்படுறாரா...?” என்று கேட்டார்.”

நான் உடனே, “அப்படியானா ஆண்டவன்னு ஒருத்தர் இல்லேன்னுதான் நீங்களும் நினைக்கிறீங்களா...? இருந்திருந்தா இந்த அயோக்கியத் தனத்தையெல்லாம் ஒழிச்சிருப்பாரே...! தன்னோட எல்லா பிள்ளைகளையும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு படைச்சிருக்க மாட் டாரே...?” என்றேன்.“மேல் ஜாதி, கீழ் ஜாதியெல்லாம் இடையிலே வந்த திருட்டுப் பயலுக பண்ணினதுன்னேன். சுரண்டித் திங்கிறதுக்காகச் சோம்பேறிப் பசங்க பண்ணின ஏற்பாடுன்னேன். எல்லாரும் ஆயா வவுத்துல பத்து மாசம் இருந்து தானே பொறக்கிறான். அதுலே என்ன பிராமணன் சூத்திரன்...? ரொம்ப அயோக்கியத்தனம்...!” என்றார் காமராசர்.

எனக்குள் பெருமையும், பூரிப்பும் பிடிபடவில்லை. காமராசரைக் கட்டிப் பிடித்து ஆலிங்கனம் செய்ய வேண்டும் போலிருந்தது. இவருக்குள் இவ்வளவு சிந்தனை ஊற்றா.....? இத்தனை கம்பீரமா? அடங்காத சீற்றமா? ஆத்திர நெருப்பா? அவர் பேசப்பேச நான் வானுக்கும், பூமிக்குமாய்க் குதித்தேன்.“நீங்கள் ஏன் உங்களை ஒரு முழுநாத்திகராய் அறிவித்துக் கொள்ளவில்லை...?” என்று கேட்டேன்.“நான் ஒரு சமுதாயத் தொண்டன். நாத்திகவாதி - ஆத்திகவாதி எல்லாருக்கும் சேவை செய்றவன். எனக்கு எதிரே வர்றவனை “மனுஷன்”னுதான் பாக்குறேனேதவிர அவனை பிராமணன், சூத்திரன்னு பாக்குறதில்லே.... அப்படி எவனும் என்கிட்டே பேசிகிட்டு வரவும் முடியாது. நாத்திகவாதம்கிறது ஒரு தனி மனிதக் கொள்கை. அரசியல்வாதி பொதுவானவன். ஒரு கோயிலை நிருவாகம் பண்ண நிதி கொடுக்க வேண்டியது, அரசியல்வாதியோட கடமை. அந்தக் கோயில்லே ஆறுகால பூஜை ஒழுங்கா நடக்குதா.. விளக்கு எரியுதான்னு பாக்க வேண்டியது, “கவர்னென்°” பண்றவனோட வேலை. “நான் நாத்திகவாதி. எனவே கோயிலை இடிப்பேன்”னு எவனும் சொல்லமுடியாது. கம்யூனிச சமுதாயத்திலேயே கோயிலும், பூஜையும் இருக்கே...! தனிப்பட்ட முறையில நான் கோவில், பூஜை, புனஸ்காரம்னு பைத்தியம் பிடிச்சி அலையிறதில்ல. மனிதனோட அன்றாடக் கடமைகள்தான் முக்கியம்னு நெனைக்கிறவன்...” என்று மிகத் தெளிவாகப் பேசினார்.

“அப்படியானா, நீங்க பூஜை, பிரார்த்தனையெல்லாம் பண்றதில்லையா...?” எனக் கேட்டேன்.“அதெல்லாம் வேலை, வெட்டி யில்லாதவன் பண்றதுன்னேன். அடுத்த வேளை சோத்துக்கில்லாதவன், கடன் வாங்கி ஊர், ஊரா ‘ஷேத்ராடனம்’ போறான்... எந்தக் கடவுள் வந்து ‘நீ ஏண்டா என்னப் பாக்க வரலைன்னு இவன் கிட்டே கோவிச்சுகிட்டான்....?’ அபிஷேகம் பண்றதுக்காக கொடம், கொடமாப் பாலை வாங்கி வீணாக்குறானே மடையன்.... அந்தப் பாலை நாலு பிள்ளைங்க கிட்டே கொடுத்தா, அதுங்க புஷ்டியாவாவது வளருமால்லியா...?”“பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்குப் பி.ஹெச்.டியா கொடுக்கிறாங்க...? பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம்.

பணம் படைச்சவன் போடுற பக்தி வேஷம், ‘சோஷியல் ஸ்டேட்டஸ் ’க்காக. நாலு பேர் தன்னைப் பக்திமான், பெரிய மனுஷன்னு பாராட்டணும்கிறதுக்காக. ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலாமில்லியா....” ஊருக்கு நூறு சாமி... வேளைக்கு நூறு பூஜைன்னா.... மனுஷன் என்னிக்கு உருப்படறது...? நாட்டுல வேலையில்லாத் திண்டாட்டம்..... வறுமை - சுகாதாரக்கேடு.... ஏற்றத் தாழ்வு இத்தனையையும் வச்சிகிட்டு பூஜை என்ன வேண்டிக்கிடக்கு.... பூஜைன் னேன்.....? ஆயிரக்கணக்கான இந்த ‘சாமிகள்’ இதப்பாத்துகிட்டு ஏன் பேசாம இருக்குன்னேன்...?”தலைவர் போடு, போடு என்று போட்டுக் கொண்டு வந்தார். அவருக்குள் ஆயிரம் இங்கர் சாலை, பெரியாரை நான் கண்டெடுத்தேன்.

“அப்படியானா.... நீங்க பல தெய்வவழிபாட்ட வெறுக்கிறீங்களா.... இல்லே, தெய்வ வழிபாட்டையே வெறுக்கிறீங்களா....?” என்று கேட்டேன்.அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல்... “லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம்பிச்சிட்டான். சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த  வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்தும் கடவுளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா...? “அரேபியாவிலே இருக்கிறவன் ‘அல்லா’ன்னான். ஜெருசலத்தல இருக்கிறவன் ‘கர்த்தர்’னான் அதி லேயும் சில பேரு மேரியக் கும்பிடாதேன்னான். கிறித்துவ மதத்திலேயே ஏழு, எட்டு ‘டெனாமினேஷன்’ உண்டாக்கிட்டான். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமியச் சொன் னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடி மக்களான திராவிடர்கள், காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்....? அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான்... காங்கிரஸ்  - கம்யூ னிஸ்ட் - தி.மு.க. மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி. யார் யாருக்கு எதிலே லாபமிருக்கோ அதுல சேந்துக்குறான்... மதம் மனிதனுக்குச் சோறு போடுமா...? அவன் கஷ்டங்களப் போக்குமா...? இந்தக் குறைந்த பட்ச அறிவுகூட வேண்டாமா மனுஷனுக்கு...? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா... நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே...! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே....! இப்படியெல்லாம அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்...?” தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக்கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்த மான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.

“நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ்ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே... அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே...?” என்று வினாத் தொடுத்தேன்.தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். “டேய்... கிறுக்கா... நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்....? ராமன், கிருஷ்ணன்கிறது கற்பனைக் கதாபாத்திரம்னேன். அதையெல்லாம் நம்மாளு கடவுளாக்கிட்டேன்னேன்....! இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயகனுக்குக் ‘கட்அவுட்’ வைக்கிறானில்லையா... அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப் பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் புத்தங்கள்ல சொல்லப் பட்டிருக்கிற விஷயங் களஎடுத்துக்கணும். ஆசாமிய விட்டுபுடணும்.” ....காலப்போக்குல என்னாச்சுன்னா.. லட்சக்கணக்கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக்  கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல்வாதி. அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்டவன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க.... புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதாபாத்திரங்கள வச்சித்தான் நம்ம ஜனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான். நவ ராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூஜை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை ஜனங்களையும், பாமர ஜனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப்பு நடத்தறான். நான் தீபாவளி கொண்டாடுனதுமில்ல... எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல... புதுசு கட்டுனதுமில்ல... பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்...” என்று விளக்கினார். “மதம் என்பதே மனிதனுக்கு அபின்...!” அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே...?” என்று ஒரு கேள்வியைப் போட்டேன். தலைவர், “நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல... பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா...? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக் கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டி யல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம்; ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். ‘சாமிக்குத்தம்’ வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே தவிர, தன்னம்பிக் கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன்....” என்றார்.

“கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா...? அதிலேருந்து எப்போ விலகுனீங்க...?” இது நான்.“சின்னப் பையனா இருந்தப்போ விருதுநகர்லே பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு ஒரு நாடாரே பூஜை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930-க்கு முன்னாலே சஞ்சீவரெட்டியோட திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுகிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. போயும், போயும் கடவுள் தலை முடியத்தானா கேக்குறாரு... எல்லாம் ‘பார்பர் ஷாப்’காரன் ‘செட்-அப்’ அப்புடீன்னு சிந்திச்சேன். விட்டுட்டேன். ஆனா, சஞ்சீவரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆண்டவனுக்காகத் தலையையே கேட்டா கொடுப் பானா...?” என்று கேட்டுவிட்டு விழுந்து, விழுந்து சிரித்தார்.

“அப்படியானா... மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே... அதப்பத்தி....?” என்று கேட்டேன்.“அடுத்த மனுஷன் நல்லாருக்கணும்கிறதுதான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை. இதுல நாம சரியா இருந்தா... தெய்வம்னு ஒண்ணு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்...!” காமராசர் என்கிற அந்த மனிதாபிமானி என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்து கிறார். வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டையோ இல்லா மல் நடந்துபோன சிறுவர்களைப் பார்த்து, “ஏன் பள்ளிக்கூடம் போகலியா...?” என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்தது விடுகிறது.

சொன்னவர்:-திரு. சீர்காழி பெ. எத்திராஜ்-முன்னாள் மேலவை உறுப்பினர்.

Source:http://kamaraj101.blogspot.com/

கர்ம வீரர் காமராஜரின் புகைப்படங்கள்

காமராஜர் குழந்தையாக இருந்தபோது படுத்த தொட்டில்  
Source:http://www.pkp.in/mydrive/mydrive/Tamil%20E%20Books/Kamarajar%20Life.pdf